சென்னை: உங்கள் கவனத்திற்கு… குரூப் 2 தேர்வை எழுத தேர்வு மையத்துக்கு எத்தனை மணிக்கு வர வேண்டும் என்ற முக்கிய அறிவிப்பை டி.என்.பி.எஸ்.சி., வெளியிட்டு உள்ளது.
எப்படியாவது அரசு உத்யோகத்தில் உட்கார்ந்துவிட வேண்டும் என இன்றும் லட்சக்கணக்கான இளைய தலைமுறையினர் படித்து வருகின்றனர். அவர்களின் கனவுகளை நனவாக்க ஏதுவாக, 2,327 காலிப் பணியிடங்களை நிரப்ப குரூப் 2 குரூப் 2A தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளன.
கிட்டத்தட்ட 7 லட்சத்து 93 ஆயிரத்து 962 பேர் பேர் விண்ணப்பித்து தேர்வு எழுத தகுதி பெற்றுள்ளனர். இந்த தேர்வு வரும் 14ம் தேதி ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ 2,763 மையங்களில் நடக்கிறது.தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
தேர்வெழுத மும்முரமாக தயாராகி வரும் 7 லட்சம் பேரும் முக்கியமாக கவனிக்க வேண்டிய ஒன்றை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டு உள்ளது. அதாவது தேர்வு தொடங்கும் நேரம், தேர்வுக்கூட அறைக்குள் தேர்வர் எத்தனை மணிக்குள் இருக்க வேண்டும் என்ற முக்கியமான விஷயங்களை அறிக்கை மூலம் பட்டியலிட்டு உள்ளது.
தேர்வு மையத்துக்குள் வரவேண்டிய நேரம்: காலை 8.30 மணி, சலுகை அளிக்கும் நேரம்: காலை 9.00 மணி வரை (30 நிமிடங்கள் மட்டுமே). தேர்வு தொடங்கும் நேரம்: காலை 9.30 மணி. தேர்வு எழுதும் அனைவரும் சரியான நேரத்துக்கு தேர்வு மையத்துக்கு செல்ல வேண்டும். 30 நிமிடங்கள் சலுகை நேரத்துக்கு பின்னர் எந்த ஒரு தேர்வரும் தேர்வறைக்குள் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்.
தேர்வர்கள் தேர்வாணைய இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட ஹால் டிக்கெட்டுடன் தேர்வு மையத்துக்கு வரவேண்டும். ஹால் டிக்கெட் இல்லாத யாருக்கும் தேர்வு எழுத அனுமதி கிடையாது. ஆதார் அட்டை, பாஸ்போர்ட், லைசென்ஸ், பான் அல்லது வாக்காளர் அடையாள அட்டை என ஏதாவது ஒன்றின் ஒளி நகலை கொண்டு வர வேண்டும்.
ஹால் டிக்கெட்டில் தேர்வு எழுதுவோரின் போட்டோ அச்சிடாமல் இருந்தால், தெளிவாக இல்லாமல் இருந்தால் அல்லது தேர்வர்களின் தோற்றத்துடன் பொருந்தாமல் இருந்தால் பாஸ்போர்ட் போட்டோ ஒன்றை வெள்ளைத்தாளில் ஒட்டி அதில் தனது விவரங்களை பதிவு செய்து கையொப்பமிட வேண்டும். பின்னர் ஹால் டிக்கெட் நகல், ஆதார், பான், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை என ஏதேனும் ஒரு அட்டையின் நகலை இணைத்து தலைமை கண்காணிப்பாளரிடம் ஒப்பம் பெற்று சமர்ப்பித்து தேர்வு எழுதலாம்.
காலை 9 மணிக்கு தேர்வு மையம் வந்தால் போதும் என்று நினைக்காமல் 8.30 மணிக்குள் தயாராக வந்துவிட வேண்டும் என்பதை கல்வியாளர்கள் மீண்டும் ஒரு முறை போட்டியாளர்களுக்கு அறிவுறுத்தி உள்ளனர். 9 மணி என்று எண்ணி, அதற்கு பின்னர் 30 நிமிடங்கள் சலுகை நேரம் கிடைக்கும் என்று அஜாக்கிரதையாக இருக்கக்கூடாது என்றும் அவர்கள் அறிவுறுத்தி உள்ளனர்.