விழுப்புரம்: விழுப்புரம் அருகே அரசுப் பேருந்தில் உடல் நலக்குறைவால் இறந்தவரின் சடலத்தை நடுரோட்டில் இறக்கிவிட்டுச் சென்ற தற்காலிக டிரைவர், கண்டக்டரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் கோட்டக் கண்காணிப்பாளர் உத்தரவு பிறப்பித்தார்.
சத்தீஸ்கரை சேர்ந்த பீமாமண்டாவி (60), அசோகுமார் ஓயான் (19), கஜுனுகொடோபி (20) ஆகியோர் விக்கிரவாண்டியில் இயங்கி வரும் தனியார் தீவன நிறுவனத்தில் பணியாற்றி வந்தனர்.
இந்நிலையில், கடந்த 6-ம் தேதி, மூன்று பேரும் விழுப்புரத்தில் இருந்து சென்னைக்கு அரசு பஸ்சில் சென்றனர். செங்கல்பட்டு அருகே சென்று கொண்டிருந்த போது, பீமாமாண்டாவுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு பேருந்திலேயே உயிரிழந்தார்.
செங்கல்பட்டு மேம்பாலம் அருகே எதிர்பாராதவிதமாக உயிரிழந்த பீமாமாண்டவி (60), அவரது இரு பேரன்கள் அசோகுமார் ஓயான் (19), கஜுனுகொடோபி (20) ஆகியோரை அரசுப் பேருந்தின் தற்காலிக ஓட்டுநர் ராம்குமார், ரசூல் ரஹ்மான் ஆகியோர் இறக்கிவிட்டனர்.
அதையடுத்து, தாத்தாவின் உடலை இரண்டு பேரன்களும், அவ்வழியே சென்றவர்கள் உதவியுடன் ஆம்புலன்சில் செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இச்சம்பவம் குறித்து செங்கல்பட்டு காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிவு செய்து, நடுரோட்டில் விட்டுச் சென்ற நடத்துநர் மற்றும் ஓட்டுநர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப் பரிந்துரைத்தனர்.
அந்த பரிந்துரையின் அடிப்படையில், சடலத்துடன் பயணிகளை நடுரோட்டில் இறக்கிவிட்ட தற்காலிக டிரைவர் ராம்குமார், கண்டக்டர் ரசூல்ரகுராமன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து விழுப்புரம் போக்குவரத்து கழக நிர்வாக இயக்குனர் குணசேகரன் உத்தரவிட்டார்.