சென்னை: ’96’ படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு இயக்குநர் பிரேம்குமார் ‘மெய்யழகன்’ படத்தை இயக்கி முடித்துள்ளார்.
கார்த்தி, அரவிந்த்சாமி, ராஜ்கிரண், ஸ்ரீதிவ்யா மற்றும் பலர் நடித்துள்ள இப்படம் செப்டம்பர் 27-ம் தேதி வெளியாகிறது. 2டி நிறுவனத்தின் கீழ் சூர்யா மற்றும் ஜோதிகா தயாரித்துள்ளனர்.
‘மெய்யழகன்’ படத்தின் போஸ்டர்களை முழுக்க முழுக்க தமிழ் வார்த்தைகளால் விளம்பரப்படுத்தியதற்காக இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், இயக்குனர் பிரேம்குமார் தனது அடுத்த படத்தின் கதைகள் குறித்து ஒரு பேட்டியில் பேசியுள்ளார்.
அதில், ’96’ படத்தின் 2-ம் பாகத்திற்கான கதையை எழுதி வருவதாகவும், முழுமையாக எழுதி முடித்தவுடன் விஜய் சேதுபதியை சந்திப்பேன் என்றும் தெரிவித்துள்ளார். ’96’ படத்தின் 2-ம் பாகத்தை எழுத வேண்டாம் என்று முடிவு செய்திருந்ததாகவும், அதை எழுதிய பிறகு பிடித்த கதையாக மாறியதாகவும் பிரேம்குமார் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ’96’ படத்தின் 2-ம் பாகத்தை என்னால் மட்டும் முடிவு செய்ய முடியாது என்றும், அதற்கு விஜய் சேதுபதி – த்ரிஷாவின் தேதிகள் தேவை என்றும் பிரேம்குமார் கூறியுள்ளார்.
இந்த செய்தி ’96’ ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர்.