சென்னை: குழந்தைகளை மகிழ்விக்க அவர்களுக்கு புது விதமான உணவுகளை செய்து கொடுங்கள். குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் மிகவும் பிடிக்கும். மக்ரோனியுடன் சிக்கன் சேர்த்து செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்: சிக்கன் – 200 கிராம், மக்ரோனி – ஒரு கப், சோயா சாஸ் – 3 டேபிள் ஸ்பூன், சோள மாவு – 2 டீஸ்பூன், வெங்காயம் – ஒன்று, இஞ்சி – ஒரு துண்டு, பூண்டு – 10, பச்சை மிளகாய் – 1, குடை மிளகாய் – 1, இஞ்சி பூண்டு விழுது – அரை டீஸ்பூன், தக்காளி – ஒன்று, மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன், தக்காளி சாஸ் – 3 டேபிள் ஸ்பூன், காய்ந்த மிளகாய் துகள் – 3 டேபிள் ஸ்பூன், மிளகு தூள் – 1 டீஸ்பூன், கொத்தமல்லித்தழை – சிறிதளவு, எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை: கொத்தமல்லி, பூண்டு, இஞ்சி, ப.மிளகாய், குடைமிளகாய், வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும். சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். ஒரு கிண்ணத்தில் சுத்தம் செய்த சிக்கனை போட்டு அதனுடன் சோயா சாஸ், சோள மாவு, மிளகு தூள், உப்பு சேர்த்து கலந்து சுமார் அரை மணி நேரம் ஊறவிடவும்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதி வந்ததும் மக்ரோனி, எண்ணெய், உப்பு சேர்த்து முக்கால் பாகம் வேகவிட்டு தனியாக எடுத்து வைக்கவும். மற்றொரு கடாயில் எண்ணெய்விட்டு சிக்கன் துண்டுகளை போட்டு சுமார் பத்து நிமிடங்களுக்கு வேகவிடவும்.
சிக்கன் வெந்ததும் தனியாக எடுத்து வைக்கவும். அதே வாணலியில் மீண்டும் எண்ணெய்விட்டு சூடானதும் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். அத்துடன், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும். இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் தக்காளி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்னர், மிளகுத்தூள், காய்ந்த மிளகாய் துகள், மிளகாய்த்தூள், உப்பு, தக்காளி சாஸ் சேர்த்து கிளறி வேகவிடவும். பின்னர், சிக்கன் துண்டுகள், மக்ரோனி சேர்த்து கலந்து இரண்டு நிமிடங்கள் கழித்து இறக்கவும். இறுதியாக, கொத்தமல்லித்தழை தூவி சுடச்சுட பரிமாறவும். சுடச்சுட சிக்கன் மக்ரோனி ரெடி.