சென்னை: தமிழக செய்தி மக்கள் தொடர்பு இயக்குனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ் 102 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களும், 311 தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களும் செயல்பட்டு வருகின்றன.
இவற்றில் 2024-2025-ம் கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கைக்கான கால அவகாசம் மாணவர்களின் நலன் கருதி ஏற்கனவே 31.08.2024 வரை வழங்கப்பட்டுள்ளது.
தற்போது மாணவர்களின் நலன் கருதி 30.09.2024 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொண்டு தாங்கள் விரும்பும் தொழிற்பயிற்சி நிலையங்களுக்கு கல்விச் சான்றிதழ்களுடன் நேரில் சென்று தாங்கள் விரும்பும் தொழிற்கல்வியை தேர்வு செய்து தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரலாம்.
அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் சேரும் மாணவர்களுக்கு பயிற்சி கட்டணம் கிடையாது. கல்வி உதவித்தொகையாக மாதம் ரூ.750 வழங்கப்படும். இலவச சைக்கிள், இலவச சீருடை, இலவச காலணிகள், இலவச பயிற்சி உபகரணங்கள், தமிழக அரசால் வழங்கப்படும் இலவச பேருந்து வசதி வழங்கப்படும்.
கடந்த ஆண்டுகளில் தொழில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெற்ற 85 சதவீத பயிற்சியாளர்கள் பல முன்னணி தொழில் நிறுவனங்களில் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இன்றைய தொழில்களுக்கு தேவையான Industry 4.0 உட்பட பல நவீன தொழிற்பயிற்சிகளை அரசு தொழிற்பயிற்சி நிலையங்கள் வழங்கி வருகின்றன.
இது தொடர்பாக ஏதேனும் சந்தேகம் இருப்பின் பின்வரும் தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ்அப் எண்: 9499055689 என்று அதில் கூறப்பட்டுள்ளது.