வாஷிங்டன்: சர்வதேச விண்வெளி மையத்தில் இருந்து செய்தியாளர் சந்திப்பு நடத்திய விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க அதிபர் தேர்தலில் அங்கிருந்து வாக்களிக்கப் போவதாக தெரிவித்தார்.
விண்வெளி வீரர்கள் பூமியில் இருந்து 400 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சர்வதேச விண்வெளி நிலையத்தை ஆய்வு செய்வதற்காக தொடர்ந்து வருகை தருகின்றனர். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க விண்வெளி வீரர் புட்ச் வில்வர் ஆகியோர் ஜூன் 5-ம் தேதி விண்வெளி மையத்துக்கு அனுப்பப்பட்டனர்.
இன்னும் 8 நாட்களில் பூமிக்கு திரும்ப திட்டமிட்டிருந்த நிலையில் இருவரும் பயணம் செய்த ஸ்டார்லைனர் விண்கலத்தில் ஏற்பட்ட கோளாறு காரணமாக 3 மாதங்கள் விண்வெளி மையத்தில் தவித்தனர்.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்வர் இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். அப்போது பேசிய சுனிதா வில்லியம்ஸ், விண்வெளி மையத்தில் இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றார்.
அமெரிக்க அதிபர் தேர்தலை எதிர்பார்த்து காத்திருப்பதாக கூறிய இருவரும் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வாக்களிக்க போவதாக தெரிவித்தனர். சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்வர் ஆகியோரை ஏற்றிச் சென்ற ஸ்டார்லைனர் விண்கலம் சில நாட்களுக்கு ஆளில்லாமல் பூமிக்குத் திரும்பியது.
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புச் விண்வெளி வீரர்கள் அடுத்த ஆண்டு பிப்ரவரி வரை சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருப்பார்கள் என்று நாசா ஏற்கனவே அறிவித்துள்ளது.
எலோன் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம் மூலம் இருவரும் மீண்டும் பூமிக்கு கொண்டு வரப்படுவார்கள் என்றும் நாசா அறிவித்துள்ளது.