சென்னை: விஜய்யின் 69-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விஜய்யின் 69-வது படத்தை இயக்குநர் எச்.வினோத் இயக்கப் போவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்கிறார்.
கேவிஎன் புரொடக்ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா இந்தப் படத்தைத் தயாரிக்கிறார். விஜய் முழுநேர அரசியலுக்கு வருவதால், இதுவே அவரது கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
படத்தின் அதிகாரபூர்வ போஸ்டரில் அவர் நீல நிற பின்னணியில் டார்ச் வைத்திருப்பதைக் காட்டுகிறது. அதில் “ஜனநாயகத்தின் ஒளி தாங்கி” என்ற வார்த்தையும் உள்ளது. இவையனைத்தும் இப்படம் அரசியல் சார்ந்த படமாக இருக்கும் என்பதை உணர்த்துகிறது.
இப்படத்தில் நடிக்கும் நடிகர்கள் குறித்த எந்த அறிவிப்பையும் படக்குழு வெளியிடவில்லை. இந்நிலையில் இப்படத்தில் சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் விஜய்க்கு வில்லனாக ஹிந்தி நடிகர் பாபி தியோல் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது. இப்படம் அடுத்த ஆண்டு அக்டோபரில் திரைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.