ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் தோடா பகுதியில் பாஜக சார்பில் நேற்று நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
காஷ்மீரில் நீண்ட நாட்களாக வாரிசு அரசியல் நடந்து வருகிறது. காங்கிரஸ், தேசிய மாநாட்டு, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய 3 குடும்பங்கள் காஷ்மீரின் வளர்ச்சியை அழித்துள்ளன.
வாரிசு அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களிக்க வேண்டும். சட்டப்பிரிவு 370ஐ மீண்டும் கொண்டு வருவோம் என்று சிலர் கூறுகிறார்கள். இதனால் காஷ்மீர் மக்களுக்கு எந்த பயனும் இல்லை.
குறிப்பிட்ட 3 குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் மட்டுமே பயனடைவார்கள். காஷ்மீரில் ஒரு காலத்தில் கல் வீச்சு சம்பவங்கள் நடந்தன. தற்போது காஷ்மீர் மக்கள் தங்கள் கனவுகளை நனவாக்க கடுமையாக உழைத்து வருகின்றனர். புதிய ஜம்மு, புதிய காஷ்மீர் உருவாகி வருகிறது.
மதம், நம்பிக்கை, சமூக பாகுபாடுகள் இன்றி அனைத்து தரப்பு மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. ஜம்மு காஷ்மீருக்கு விரைவில் மாநில அந்தஸ்து வழங்கப்படும். காங்கிரஸ் அரச குடும்பங்கள் மிகப்பெரிய ஊழல்வாதிகள். அந்த கட்சியில் நேர்மை இல்லை.
காஷ்மீர் மக்கள் காங்கிரஸிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காங்கிரஸும் அதன் கூட்டணிக் கட்சியான தேசிய மாநாட்டும் ஜம்மு பகுதியைப் புறக்கணித்ததை யாரும் மறந்துவிடவில்லை.
அமெரிக்காவில் இந்திய பத்திரிகையாளர் மீது காங்கிரஸ் கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். வங்கதேச இந்துக்களின் நிலை குறித்து கேள்வி எழுப்பியதற்காக அவர் தாக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சி ஜனநாயகத்தை சீரழிக்கிறது. பாதுகாப்பான மற்றும் வளமான காஷ்மீரை உருவாக்க பாஜகவுக்கு வாக்களியுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.