சிவகாசி: சிவகாசியில் புதிய மதி ஒருங்கிணைந்த மருத்துவமனை வளாக திறப்பு விழா நடந்தது. மருத்துவமனை தலைவர் டாக்டர் மகேந்திரசேகர் தலைமை வகித்தார்.
பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு புதிய வளாகத்தை திறந்து வைத்தார். அதன்பின் அன்புமணி ராமதாஸ் அளித்த பேட்டி:-
தென் மாவட்ட மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான காவேரி-வைகை-குண்டாறு இணைப்பு திட்டத்தை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான இந்த திட்டத்துக்கு கடந்த ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு, நிதி ஒதுக்கீடு செய்யாததால் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
மதுரையில் வைகை ஆறு இருந்தாலும் பொதுமக்களுக்கு காவிரி குடிநீர் மட்டுமே கிடைக்கிறது. பருவநிலை மாற்றம் எதிர்காலத்தில் பெரும் பிரச்சினையாக உருவெடுக்கும்.
நீர் மேலாண்மை திட்டத்திற்கு தமிழக அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். அனைவரும் பாதுகாப்பாக பட்டாசு தொழிலை நடத்த வேண்டும். பட்டாசு மற்றும் தீப்பெட்டி மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும். சீனாவில் இருந்து பட்டாசு, லைட்டர் இறக்குமதிக்கு தடை விதிக்க வேண்டும்.
17 நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள முதல்வர், ரூ.7,600 கோடி மதிப்பிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளார். அதை முதலீடு என்று சொல்ல முடியாது.
அண்டை மாநில முதல்வர்கள் 5 நாட்களில் ரூ.30 ஆயிரம் கோடி, ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு முதலீடுகளை ஈர்த்துள்ள நிலையில், ஸ்டாலினின் அமெரிக்க பயணம் தோல்வி அடைந்ததாக பாமக கருதுகிறது. திமுக ஆட்சியில் 10 லட்சம் கோடி முதலீடுகளை கொண்டு வந்ததாக தமிழக அரசு கூறுகிறது.
ஆனால் ரூ.87 ஆயிரம் கோடியில் பணிகள் மட்டுமே தொடங்கியுள்ளன. எவ்வளவு முதலீடு வந்துள்ளது, எத்தனை வேலைவாய்ப்புகள் உருவாகியுள்ளன என்பது குறித்து தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்.
தென் மாவட்டங்களில் தொழிற்சாலைகள் மற்றும் வேலை வாய்ப்புகள் இல்லாததால், ஜாதி பிரச்னைகள் எழுகின்றன. தென் மாவட்டங்கள் கல்வியில் முதலிடம் பெற்றாலும் வேலைவாய்ப்பில் இல்லை. வேலைவாய்ப்பு கொண்டு வந்தால் தென் மாவட்டங்களில் பிரச்னை இருக்காது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இயற்கை வளங்கள் கொள்ளையடிக்கப்பட்டு கேரளாவிற்கு கடத்தப்படுகிறது. இதை சிபிஐ விசாரிக்க வேண்டும். பாலியல் குற்றங்கள் மற்றும் கொலைகள் அதிகரிப்பதற்கு முக்கிய காரணம் கஞ்சா மற்றும் மது தான்.
பள்ளிகள் அருகே போதைப்பொருள் விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. முதல்வர் நேரில் பலமுறை புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்க மறுக்கிறார். தேசிய போதைப்பொருள் தடுப்பு முகமையின் அறிக்கையின்படி, சர்வதேச போதைப்பொருள் கடத்தலின் மையமாக தமிழ்நாடு உள்ளது.
தமிழகத்தில் மதுவிலக்கு போராட்டங்களை பாமக நடத்தியது. மதுவிலக்கு போராட்டத்தில் பங்கேற்ற பாமக மாநில பொருளாளர் உள்பட 15 ஆயிரம் பெண்கள் சிறை சென்றனர். பாமக ஜாதி கட்சி என்ன கட்சி? பாமாவை விமர்சிப்பதை திருமாவளவன் நிறுத்த வேண்டும்.
திமுக சொல்வது ஒன்று செய்வது ஒன்று. சென்னையில் 500 பேருந்துகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட உள்ளன. 22 மாதங்களில் 32 சதவீதம் மின் கட்டணம் உயர்வு. அவர் கூறியது இதுதான்.
பாமக மாநில பொருளாளர் திலகபாமா, மாவட்ட செயலாளர் டேனியல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.