சென்னை: சென்னை ஓட்டேரி சேமாத்தம்மன் கோயிலில் ரூ.1.58 கோடி மதிப்பீட்டில் கருங்கல் அமைக்கும் திருப்பணிப் பணிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேற்று தொடங்கி வைத்தார்.
அதன்பின், முத்தியால்பேட்டை அங்காள பரமேஸ்வரி கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்றார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:-
இந்து சமய அறநிலையத்துறை வரலாற்றில் இல்லாத வகையில் இன்று ஒரே நாளில் 101 கோவில்களில் கும்பாபிஷேகம் நடந்துள்ளது. செப்டம்பர் 16-ம் தேதி 26 கோவில்களில் கும்பாபிஷேகம் நடக்கிறது. இதனால் இவை அனைத்தையும் சேர்த்து இன்னும் 2,226 கோவில்களில் கும்பாபிஷேகம் நிறைவடையவில்லை.
ராமேஸ்வரம் – காசி, அறுபடை வீடுகள், ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களுக்கும், புரட்டாசி மாதத்தில் வைணவ கோவில்களுக்கும் ஆன்மிக பயணம், மானசரோவருக்கு அரசு மானியம், முக்திநாத் ஆன்மிக பயணம் என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், இந்த ஆண்டுக்கான புரட்டாசி மாத ஆன்மிகப் பயணம் வைணவக் கோயில்களுக்கு வரும் செப்டம்பர் 21, 28, அக்டோபர் 5, 12 ஆகிய தேதிகளில் சென்னை, காஞ்சிபுரம், விழுப்புரம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் இருந்து தொடங்குகிறது.
1000 மூத்த குடிமக்கள் பங்கேற்கும் இந்தத் திட்டத்திற்கு அரசு ரூ. 25 லட்சம் மானியமாக வழங்கப்பட்டுள்ளது. வரும் காலங்களில் அனைத்து கோவில்களிலும் தமிழில் கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அமைச்சர் சேகர் பாபு தெரிவித்தார்.