சென்னை: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. சமீபத்தில் பாகிஸ்தானை சொந்த மண்ணில் ஒயிட்வாஷ் செய்த வங்கதேசம், இந்தியாவை வீழ்த்தும் முனைப்பில் உள்ளது.
இந்நிலையில் இந்தியா – வங்கதேசம் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்குகிறது. பங்களாதேஷ் அணியைப் பொறுத்த வரையில் திறமையான வேகப்பந்து வீச்சாளர்கள், அனுபவம் வாய்ந்த சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் பேட்ஸ்மேன்களைக் கொண்ட அபாரமான அணியாக அந்த அணி உருவாகியுள்ளது.
அந்த வகையில் வங்கதேசத்தை வீழ்த்துவதற்கு சற்று கடினமாக முயற்சி செய்ய வேண்டும் என்பதால் முதல் டெஸ்ட் போட்டிக்கான ப்ளேயிங் லெவன் அணியை தேர்வு செய்வதில் தேர்வாளர்கள் மிகவும் கவனமாக செயல்பட்டு வருகின்றனர்.
அதன்படி இந்திய அணியில் ஜெய்ஸ்வால், ரோகித் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்குவதால் கில் மூன்றாவது வீரராக களமிறங்க அதிக வாய்ப்புள்ளது.
கில்லைப் பொறுத்த வரையில் அவர் இப்போதுதான் டெஸ்ட் கிரிக்கெட்டில் கால் பதிக்கத் தொடங்கியுள்ளார். இருப்பினும், அணியில் தனது இடத்தை உறுதி செய்ய வேண்டுமானால், வங்கதேச தொடரில் சிறப்பாக பங்களிக்க வேண்டும்.
கில்லுக்கு பிறகு 4-வது வீரராக விராட் கோலி களமிறங்குகிறார். 8 மாதங்களுக்குப் பிறகு கோஹ்லி சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட உள்ள நிலையில், அவரைத் தொடர்ந்து 5-வது வீரராக கே.எல்.ராகுல் விளையாட அதிக வாய்ப்புகள் உள்ளன. இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரின் போது காயம் அடைந்து போட்டிகளில் பங்கேற்காத கே.எல்.ராகுல், வங்கதேசத்துக்கு எதிராக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே அணியில் நீடிக்க முடியும்.
இத்தகைய சூழலில் 6-வது வீரராக ரிஷப் பந்த் விளையாட உள்ளார். கார் விபத்தில் காயம் மற்றும் நீண்ட ஓய்வு காரணமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 2 ஆண்டுகளுக்கு பிறகு அணிக்கு திரும்பியுள்ள ரிஷப் பந்த், துலீப் கோப்பை தொடரில் அதிரடியாக விளையாடி தனது திறமையை நிரூபித்துள்ளார்.
ஆல்-ரவுண்டர் ஜடேஜா 7-வது வீரராகவும், தமிழக வீரர் அஷ்வின் 7-வது இடத்திலும் உள்ளனர். இந்நிலையில், அணியின் 3வது சுழற்பந்து வீச்சாளராக அக்சர் படேல் களமிறங்குவாரா அல்லது குல்தீப் களமிறங்குவாரா என்ற குழப்பம் நீடிக்கிறது.
துலீப் கோப்பை தொடரில் குல்தீப் யாதவ் பெரிதாக சாதிக்கவில்லை. ஆனால் அக்சர் படேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் ஜொலித்துள்ளார். இதனால் அக்சர் படேல் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக கிரிக்கெட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
இதன் பின்னர் பும்ரா, சிராஜ் அணியில் 10 மற்றும் 11வது வீரர்களாக களமிறங்குவார்கள் என தெரிகிறது.