அரியலூர் : அரியலூர் மாவட்டம் செந்துறை உள்ள தளவாய் போலீஸ் நிலையத்தில் பணியில் இருப்பவர் தமிழ்ச்செல்வன். இவர் கடந்த 14 ஆம் தேதி நள்ளிரவு ஊர்க் காவல் படை வீரர் வெங்கடேசன் என்பவருடன் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டார்.
இவர்கள சன்னாசி நல்லூர் -அங்கனூர் சாலையில் சிவராமபுரம் அருகே சென்று கொண்டு இருந்த போது இவர்களுக்கு முன்னாள் ஒரு மினி லாரி மணல் ஏற்றி செல்வதைக் கண்டனர். அதனைத் தொடர்ந்து போலீசார் லாரியை முந்தி சென்று பிடிக்க முயற்சி செய்தார். இதனைக் கண்ட டிரைவர் சுதாரித்துக் கொண்டு மினி லாரியை போலீசார் மீது மோதிவிட்டு தப்பிச் சென்றார். இந்த மோதலில் கீழே விழுந்த தமிழ்ச்செல்வனுக்கு இரண்டு கைகளிலும் எலும்பு முறிந்தது, வெங்கடேசனுக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டது.
இவர்கள் அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் போலீசார் மீது மோதிவிட்டு தப்பிச் சென்ற நபர்களை உடனடியாக கைது செய்ய தனிப்படை அமைத்து உத்தரவிட்டார்.
அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ரகுபதி தலைமையிலான தனிப்படை போலீசார் செந்துறை பகுதியில் முகாமிட்டு இரவு பகலாக குற்றவாளிகளை வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் வீராக்கன் கிராமத்தைச் சேர்ந்த மினி லாரி உரிமையாளர் சரண் நாகல்குழி கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் ராஜேஷ், மணல் அள்ள சென்ற வினோத்குமார் ஆகியோரை அதிரடியாக கைது செய்தனர். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட மினி லாரியையும் பறிமுதல் செய்தனர். பின்னர் தளவாய் போலீசார் வழக்கு பதிவு செய்து ஜெயங்கொண்டம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.