புதுச்சேரி: புதுச்சேரியில் இந்திய கூட்டணியினர் நடத்திய பந்த் போராட்டத்தால், கோரிமேடு உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் தமிழக பேருந்துகள் நிறுத்தப்பட்டு, பயணிகள் ஏற்றிச் செல்லப்படுகின்றனர்.
இதனால், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக பயணிகள் காத்திருக்க வேண்டியுள்ளது. மின்கட்டண உயர்வைக் கண்டித்து புதுச்சேரியில் இந்தியா கூட்டணி சார்பில் இன்று (செப்டம்பர் 18) முழு கடையடைப்பு போராட்டம் நடத்தப்படுகிறது.
இதனால் தனியார் பேருந்துகள் இயக்கப்படவில்லை. தமிழகத்தில் இருந்து வரும் அனைத்து அரசு பஸ்களும் புதுச்சேரி எல்லையான கோரிமேடு, கனக செட்டிகுளம், முள்ளோடை, மதகடிப்பட்டு ஆகிய இடங்களில் நின்று செல்கின்றன. வெளியூர் செல்லும் பயணிகள், புதுச்சேரி அரசு பஸ்கள் மூலம் பஸ் நிலையத்தில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் எல்லையில் கொண்டு வந்து இறக்கி விடப்படுகின்றனர்.
அங்கு காத்திருக்கும் தமிழக பேருந்துகள் மூலம் சென்னை, திண்டிவனம், மரக்காணம், விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட தமிழக பகுதிகளுக்கு பயணிகள் செல்கின்றனர்.
இதனால் எல்லையோரங்களில் பேருந்துகள் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்கின்றன. அதிக அளவில் பயணிகள் வராத நிலையிலும், தமிழக பேருந்துகளின் ஓட்டுநர்கள் அவர்களுக்காக காத்திருந்து ஏற்றிச் செல்கின்றனர்.