திருப்பதி: திருப்பதி கோவிலின் புனித தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார்.
ஆந்திர மாநிலத்தில் கடந்த ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் திருப்பதி கோவில் லட்டு தயாரிப்பில் விலங்குகளின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்தியதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறினார்.
அதற்கான வாய்ப்பே கிடையாது என முன்னாள் தேவஸ்தான அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த நிலையில் கடந்த ஆட்சி காலத்தில் லட்டு பிரசாதம் தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாமிச கொழுப்பு, மீன் எண்ணெய், பாமாயில் ஆகியவை கலந்திருந்தது உண்மைதான் என்பதற்கான ஆய்வக ஆதாரத்தை தெலுங்கு தேசம் கட்சி நேற்று மாலை வெளியிட்டது.
இதனால் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான ஏழுமலையானின் பக்தர்கள் வேதனை அடைந்தனர். ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மையை கெடுத்து விட்டதாக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் விஜயவாடாவில் உள்ள தலைமைச் செயலகம் அருகே அண்ணா கேண்டினை முதல்வர் சந்திரபாபு நாயுடு திறந்து வைத்தார்.
ஏழுமலையான் கோவிலில் கடந்த ஆட்சியில் பிரசாதம் தயாரிப்பில் தரமற்ற பொருட்கள் பயன்படுத்தப்பட்டதாக திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள் நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த செயல் திருப்பதி ஏழுமலையான் கோவிலின் புனிதத் தன்மைக்கு கேடு விளைவிப்பதாகும். கடந்த ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது வரம்பு மீறிய தவறுகளை செய்துள்ளனர்.
அவர்களின் பேராசைக்கு ஏழுமலையான் சாமியும் விதிவிலக்கல்ல என தெரிய வந்துள்ளது. திருப்பதி கோவிலின் புனித தன்மைக்கு களங்கம் ஏற்படுத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.