மதுரை: மதுரையை சேர்ந்த சக வழக்கறிஞர், மதுரை உயர் நீதிமன்ற அமர்வில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் சட்டம் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதே நேரத்தில், தமிழகத்தில் உள்ள சட்டக் கல்லூரிகள் மற்றும் சட்டப் பல்கலைக் கழகங்களில் ஆசிரியர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது.
நெல்லை, மதுரை, ராமநாதபுரம், திருச்சி, தேனி, காரைக்குடி சட்டக் கல்லூரிகளில் குறைந்த எண்ணிக்கையிலான நிரந்தர விரிவுரையாளர்கள் உள்ளனர். பல சட்டக் கல்லூரிகளில் நிரந்தர மற்றும் பகுதி நேர விரிவுரையாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால் சட்டக்கல்லூரி மாணவர்கள் பாடங்களை முழுமையாக கற்க முடிவதில்லை. எனவே மதுரை, தேனி, காரைக்குடி, நெல்லை, ராமநாதபுரம், திருச்சி அரசு சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள நிரந்தர மற்றும் பகுதி நேர விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்ப உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதிகள் ஆர்.சுப்ரமணியன், எல்.விக்டோரியா கவுரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறியிருப்பதாவது:-
தமிழகத்தில் உள்ள 7 அரசு சட்டக் கல்லூரிகளில் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. சட்டக் கல்லூரிகளில் அடிப்படை வசதிகளை அரசு செய்து தராவிட்டால் சட்டக் கல்லூரிகளை மூடலாமா? தமிழ்நாட்டில் எத்தனை சட்டக் கல்லூரிகள் உள்ளன?
அவற்றில் எத்தனை விரிவுரையாளர்கள் பணிபுரிகின்றனர்? எத்தனை மாணவர்கள் படிக்கிறார்கள்? சட்டக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் மாணவர்-பேராசிரியர் விகிதம் என்ன?
சட்டக் கல்லூரிகளில் எத்தனை ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உள்ளன? அவற்றில் எத்தனை காலியாக உள்ளன? சட்டக் கல்லூரிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து தமிழக உயர்கல்வித் துறை முதன்மைச் செயலர் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
வழக்கு விசாரணை அக்., 30-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் கூறியுள்ளனர்.