சென்னை: மெரினா மற்றும் பெசன்ட்நகர் கடற்கரையில் இந்திய கடலோர காவல்படையினர் இன்று சுத்தப்படுத்தும் பணியில் 450 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றினர்.
சர்வதேச கடலோர தூய்மை தினம் (ICCD) ஆண்டுதோறும் செப்டம்பர் 3-ம் தேதி உலகெங்கிலும் உள்ள கடலோரப் பகுதிகளில் அனுசரிக்கப்படுகிறது. கடற்கரைகளை சுத்தம் செய்ய மக்களை ஊக்குவிப்பதே இந்த நாள் நோக்கமாகும்.
உலகின் பெருங்கடல்கள் மற்றும் நீர்வழிகளைப் பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இதன் நோக்கம். இந்நிலையில், இந்திய கடலோர காவல்படையின் கிழக்கு மண்டலம் சார்பில் மெரினா மற்றும் பெசன்ட்நகர் எலியட்ஸ் கடற்கரையில் இன்று காலை சர்வதேச கடலோர தூய்மைப்படுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் இந்திய கடலோர காவல்படை கிழக்கு மண்டல ஐஜி டோனி மைக்கேல் கலந்து கொண்டு கடலோர தூய்மை பணியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். விழாவில் அவர் பேசுகையில், “கடலோர சுற்றுச்சூழலை பாதுகாப்பது மனித நலனுக்கு மிகவும் பயனுள்ள செயலாகும்.
பெருங்கடல்களில் நுண் பிளாஸ்டிக்கைக் கொட்டுவது கடல் சூழலைப் பாதிக்கிறது. பொதுமக்கள் கடுமையாக உழைத்தால் இதை தடுக்க முடியும்.
இது குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்தவே இதுபோன்ற கடற்கரையை சுத்தம் செய்யும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன,” என்றார்.
இதில் பள்ளி, கல்லூரி மாணவர்கள், தேசிய மாணவர் ராணுவம், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், தொண்டு நிறுவனங்கள் என 900 பேர் கலந்து கொண்டு மெரினா, பெசன்ட்நகர் கடற்கரையில் கிடந்த குப்பைகளை அகற்றினர்.
இப்பணியில் மொத்தம் 450 கிலோ பிளாஸ்டிக் கழிவுகள் அகற்றப்பட்டன. அவை மாநகராட்சியால் முறையாக அப்புறப்படுத்தப்பட்டன.