கொழும்பு: இலங்கை அதிபரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த தேர்தலில் 38 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். அவர்களில் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய சக்தி முன்னணியின் சஜித் பிரேமதாசா, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமாரா திசாநாயக்க மற்றும் பொதுஜன பெரமுன கட்சியின் நமல் ராஜபக்ஷ ஆகியோர் பிரதான வேட்பாளர்களாக இருந்தனர்.
சனிக்கிழமை மாலை வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதல் சுற்று வாக்கு எண்ணிக்கையில் சஜித் பிரேமதாசா மற்றும் அநுரா இடையே கடும் போட்டி நிலவியது. ஆனால், எவரும் 50 சதவீத வாக்குகளைப் பெறவில்லை.
முதலில் வெளியிடப்பட்ட தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் தேசிய மக்கள் கட்சியின் சார்பில் போட்டியிட்ட அனுரவுக்கு 42 சதவீத வாக்குகளும், சஜித் பிரேமதாசவுக்கு 32 சதவீத வாக்குகளும் கிடைத்ததாக அறிவிக்கப்பட்டது. தற்போதைய ரணில் முதல் இரண்டு இடங்களைப் பெற்று முதல் சுற்றிலேயே வெளியேறினார்.
முதல் கட்ட வாக்கு எண்ணிக்கையில் 50 சதவீதத்துக்கு மேல் வாக்குகள் கிடைக்காததால், 2-வது விருப்ப வாக்கு எண்ணிக்கையை நடத்த தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. 2-வது மற்றும் 3-வது விருப்ப சுற்று வாக்கு எண்ணிக்கையின் போது அநுரா முதலிடத்தில் இருந்ததால் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
அதன்படி இலங்கையின் 9-வது ஜனாதிபதியாக மார்க்சிஸ்ட் தலைவர் அநுரா குமாரா திசாநாயக்க இன்று பதவியேற்கவுள்ளார். அநுரா, “பல நூற்றாண்டுகளாக நாம் வளர்த்து வந்த கனவு இறுதியாக நனவாகியுள்ளது. இந்த சாதனை எந்த தனி நபருக்கும் சொந்தமானது அல்ல.
உங்கள் கூட்டு முயற்சியால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியம். உங்கள் அர்ப்பணிப்பு எங்களை இந்தளவுக்கு கொண்டு வந்துள்ளது. அதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருப்பேன். இந்த வெற்றி நம் அனைவருக்கும் சொந்தமானது. சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள் மற்றும் அனைத்து இலங்கையர்களின் ஒற்றுமையே இந்தப் புதிய தொடக்கத்தின் அடித்தளமாக இருக்கும்.
புதிய மறுமலர்ச்சி இலங்கையை உருவாக்குவோம்,” என்றார்.