திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவில் லட்டு பிரசாத நெய்யில் கலப்பட விலங்கு கொழுப்பு விவகாரம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், முன்னாள் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி பாவம் செய்துவிட்டு ஏழுமலையானிடம் மன்னிப்பு கேட்டு நேற்று முதல் 11 நாட்கள் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக துணை முதல்வர் பவன் கல்யாண் அறிவித்திருந்தார்.
அதன்படி துணை முதல்வர் பவன் கல்யாண் நேற்று குண்டூரில் உள்ள தசாவதார வெங்கடேஸ்வர சுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்து உண்ணாவிரதத்தை தொடங்கினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:-
கடந்த ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சியின் போது, ஏழுமலையான் கோவிலில் நடந்து வந்த பூஜை முறைகளை மாற்றி அமைத்தனர். பிரசாதத்தில் கலப்படம் இருக்கிறது, தரம் இல்லை என்று முன்பே சொன்னோம். இதை கவனிக்கவில்லை. மற்ற வழிபாட்டுத் தலங்களில் இது நடந்திருந்தால், அது உலக விவாதப் பொருளாகியிருக்கும்.
ஆனால் இந்துக்கள் அமைதியாக இருக்க வேண்டுமா? எந்த மதத்தின் உணர்வுகளையும் புண்படுத்துவது வேடிக்கையாகாது. மற்ற மத வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடந்தால் ஜெகன்மோகன் கேள்வி எழுப்புவார்.
ஆனால் திருமலையில் தவறு செய்தவர்களுக்கு உதவுகிறார். என்னைப் பொறுத்தவரை அது எந்த மதமாக இருந்தாலும் அந்த மத கலாச்சாரத்திற்கு எதிராக செயல்பட்டால் அதற்கு எதிராக போராடுவேன். லட்டு பிரசாத கலப்பட வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும்.
இதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு முதல்வர் பரிந்துரைக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
* ஜெகன் மோகன் வீடு முற்றுகை விஜயவாடா அருகே தாடேபள்ளியில் ஜெகன்மோகன் வீட்டை பாஜக இளைஞர் அணியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அப்போது, திருப்பதி லட்டில் மாட்டு கொழுப்பை சேர்த்ததை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர். இதையடுத்து, முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினரை போலீஸார் கைது செய்தனர்.