நியூயார்க்: பிரதமர் மோடி நியூயார்க்கில் இருந்து இந்தியா செல்லும் முன் உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கியை சந்தித்து பேசினார். அப்போது அவர் உக்ரைன் பிரச்சினைக்கு தீர்வு காணவும், பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்தவும் இந்தியாவின் ஆதரவை மீண்டும் உறுதிப்படுத்தினார்.
இதுகுறித்து பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் ஜெலென்ஸ்கியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு, “உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கியை நியூயார்க்கில் சந்தித்தேன். இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை வலுப்படுத்தும் நோக்கில், நாங்கள் எடுத்த முடிவுகளை செயல்படுத்துவதில் உறுதியாக உள்ளோம்.
கடந்த மாதம் உக்ரைனுக்கு எனது விஜயத்தின் போது, உக்ரைன் பிரச்சினை மற்றும் பிராந்தியத்தில் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்கான தீர்வுக்கான இந்தியாவின் முந்தைய தீர்மானத்தை மீண்டும் வலியுறுத்தினோம். இவ்வாறு அவர் கூறினார்.
மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ள பிரதமர் மோடி, இரண்டாவது கட்டமாக நியூயார்க் சென்றார். அங்கு சர்வதேச போர் பதட்டங்களுக்கு மத்தியில் எதிர்காலம் குறித்து ஐ.நா. சபையின் உச்சி மாநாட்டில் உரையாற்றினார்.
இதனிடையே, பிரதமர் மோடியுடனான சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி கூறுகையில், நமது இறையாண்மை மற்றும் பிராந்திய அமைதிக்கான உங்கள் உறுதியான ஆதரவிற்கு நான் எப்போதும் நன்றியுடன் இருப்பேன். இது தொடர்பாக எக்ஸ் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், “இந்த ஆண்டில் பிரதமர் மோடியுடனான மூன்றாவது சந்திப்பு இதுவாகும்.
எங்களது உறவை தீவிரமாக வளர்த்து, பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறோம்.
எங்கள் உரையாடல்கள் சர்வதேச அளவில் நமது உறவுகளை மேம்படுத்துதல், குறிப்பாக ஐ.நா மற்றும் G20 ஆகியவற்றுடன், உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துதல் மற்றும் இரண்டாவது அமைதி உச்சி மாநாட்டிற்குத் தயாராகுதல் ஆகியவற்றில் கவனம் செலுத்தியது.
நமது இறையாண்மை மற்றும் பிராந்திய அமைதிக்கான உங்கள் அசைக்க முடியாத ஆதரவிற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்,” என்றார்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் அதிபர் ஜெலென்ஸ்கியின் அழைப்பின் பேரில், போரால் பாதிக்கப்பட்ட உக்ரைனுக்கு பிரதமர் மோடி சென்றது நினைவிருக்கலாம்.