ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் மொத்தம் உள்ள 90 சட்டசபை தொகுதிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு பிறகு 3 கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது.
அதன்படி, முதற்கட்டமாக 24 தொகுதிகளுக்கு கடந்த 18-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் 61.38 சதவீத வாக்குகள் பதிவாகின. அதன்படி 26 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
இந்த தேர்தலில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லா, பாஜக மாநில தலைவர் ரவீந்தர் ரெய்னா, ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் தாரிக் ஹமீத் கர்ரா உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்கள் உள்பட 239 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் ஸ்ரீநகர், புட்காம் மற்றும் கந்தர்பால் ஆகிய மூன்று மாவட்டங்களின் கீழ் உள்ள 15 தொகுதிகளிலும், ஜம்மு பிராந்தியத்தின் ரஜோரி மற்றும் பூஞ்ச் மாவட்டங்களுக்கு உட்பட்ட 11 தொகுதிகளிலும் 25 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர்.