தமிழகத்தில் சில நாட்களாக கடும் வெப்பம் நிலவி வந்த நிலையில், வட மாவட்டங்களில் மழையுடன் குளிர்ந்த காலநிலை நிலவுகிறது. தென் மாவட்டங்களிலும் மழை படிப்படியாக அதிகரிக்கும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக கோடை வெயிலால் அவதிப்பட்டு வரும் மக்கள், பகல் நேரங்களில் வெளியே செல்வதை தவிர்த்து வந்தனர். மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் 100 டிகிரிக்கு மேல் வெயில் கொளுத்தியது.
இந்நிலையில், கடந்த சில நாட்களாக சென்னை, செங்கல்பட்டு போன்ற வடமாவட்டங்களில் மழை பெய்து வருவதால் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. மதுரை, திருச்சி, ஈரோடு, விருதுநகர், சிவகங்கை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இன்றும் நாளையும் வெப்பம் குறையும் என தமிழ்நாடு வெதர்மேன் தெரிவித்துள்ளார்.
சென்னை மற்றும் சுற்றுவட்டார மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து இன்று மேலும் மழை பெய்ய வாய்ப்புள்ளது. வட மற்றும் தென் மாவட்டங்களில் மழை பொழிவு குறித்த தகவல்களை அளித்துள்ள பிரதீப் ஜான், அக்டோபர் மாதத்தில் மழை அதிகரிக்கும் என கணித்துள்ளார்.
மேலும், இந்தியா – வங்கதேசம் இடையேயான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முதல் 3 நாட்கள் மழையால் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. தமிழகத்தின் உள் பகுதிகளில் குறைந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் இன்று சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் வரும் 28ம் தேதி அதிக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், கனமழை பெய்யும் பகுதிகளை பொருத்தவரை கோவை, வேலூர், திருப்பத்தூரில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36°C ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 27-28°C ஆகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.