சென்னை: ‘தூய்மையே சேவை’ என்ற பிரசாரத்தை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் எல்.முருகன் நேற்று சென்னை தூர்தர்ஷன் அலுவலகத்தில் தொடங்கி வைத்தார். பின்னர் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-
மத்திய அரசின் மூலம், கடந்த 10 ஆண்டுகளாக செப்டம்பர் 18 முதல் அக்டோபர் 2 வரை சேவை வாரங்களாக கடைபிடித்து வருகிறோம்.
பெண்கள் இருக்கும் பள்ளிகள் மற்றும் வீடுகளில் 100 சதவீத கழிவறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
கடந்த 10 ஆண்டுகளில் நமது நாடு மிக வேகமாக வளர்ச்சியடைந்து வருகிறது. 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாற உள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் சென்னை-பெங்களூரு மற்றும் சென்னை-விசாகப்பட்டினம் இடையே தொழில்துறை வழித்தடங்கள் கட்டப்பட்டு வருகின்றன.
மேலும், சென்னை, காமராஜர், தூத்துக்குடி வஉசி துறைமுகங்கள் சர்வதேச தரத்திற்கு மேம்படுத்தப்பட்டு வருகின்றன. சென்னையை அடுத்த திருமழிசையில் கிடங்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் பிரதமரை சந்தித்து கோரிக்கைகளை வைத்தார்.
இந்த சந்திப்பின் அடுத்த கட்ட நடவடிக்கையாக பிரதமர் அலுவலகம் மூலம் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பதவியேற்றால் தமிழகத்திற்கு எந்த முன்னேற்றமும் ஏற்படாது.
திமுக வந்த பிறகுதான் மது, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளது. இவ்வாறு கூறினார். முன்னதாக அவர் ஊழியர்களிடம் தூய்மை பாரதம் திட்டத்திற்கான உறுதிமொழியை எடுத்துக் கொண்டார்.