திருப்பூர் அருகே திருமுருகன்பூண்டியில் ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில் மூலம் ஆயத்த ஆடை தொழிலுக்கான ஏற்றுமதி நிதி மற்றும் வர்த்தக வசதி குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று நடந்தது.
இதில் பங்கேற்ற மத்திய வர்த்தக அமைச்சகத்தின் வெளிநாட்டு வர்த்தகப் பிரிவு இணை இயக்குநர் ஆனந்தமோகன் மிஸ்ரா கூறியதாவது: நாட்டின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தக வளர்ச்சி பிரகாசமாக உள்ளது. ‘மேக் இன் இந்தியா’ முயற்சியால் புதிய மறுமலர்ச்சி வந்துள்ளது. 2030ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த ஏற்றுமதி வர்த்தகம் 83.72 லட்சம் கோடி ரூபாயாக உயரும் என்றார். அதற்காக இலக்குகளை நிர்ணயித்து பணிகளை செய்து வருகிறோம்.
ஏற்றுமதி வர்த்தகத்தின் வளர்ச்சியில், ஜவுளித் துறையின் பங்களிப்பு மிக முக்கியமானது. ‘டிஜிட்டல்’ தொழில்நுட்பத்தின் வளர்ச்சி மதிப்பு கூட்டப்பட்ட ஆடை உற்பத்தி மூலம் வர்த்தக மதிப்பை அதிகரிக்கலாம்; வர்த்தகத்தை மிகவும் வலுவாக கட்டியெழுப்ப முடியும் என்றார்.