புதுடெல்லி: ரஃபேல் போர் விமானங்கள் வாங்குவது குறித்து ஆலோசிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் இன்று பிரான்ஸ் செல்கிறார். பிரான்ஸின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனம் தயாரித்த ரஃபேல் விமானங்களை இந்தியா ஏற்கனவே வாங்கியுள்ளது.
விமானப்படையிடம் 36 ரஃபேல் விமானங்கள் சேவையில் உள்ளன. தற்போது ரஃபேல் போர் விமானங்களை கடற்படைக்கு வாங்க மத்திய அரசு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.
இந்நிலையில் 2 நாள் பயணமாக பிரான்ஸ் செல்லும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் அந்நாட்டு உயர் அதிகாரிகளை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இந்த சந்திப்பின் போது ரஃபேல் விமானங்கள் விற்பனை தொடர்பான இறுதி அறிக்கையை பிரான்ஸ் சமர்ப்பிக்க உள்ளது. அதை பரிசீலித்து, இந்த ஒப்பந்தத்தை இந்த நிதியாண்டுக்குள் முடிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
ரஷ்யாவிடம் இருந்து வாங்கப்பட்ட இந்திய கடற்படையில் மிக்-29கே விமானத்தை மாற்ற ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஒருவேளை ஒப்பந்தம் வெற்றிகரமாக நடந்தால், ரஃபேல் போர் விமானங்களும் இந்திய கடற்படையில் சேர்க்கப்படும்.
இந்தியா 22 ஒற்றை இருக்கை ரபேல் போர் விமானங்களையும், 4 இரு இருக்கைகள் கொண்ட பயிற்சி விமானங்களையும் வாங்க திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டில் மட்டும் போர் விமானங்கள் வாங்குவது இது 2வது முறையாகும்.