கான்பூர்: இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.
சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் இந்திய அணி 280 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது. இந்நிலையில் இவ்விரு அணிகள் மோதும் 2-வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி உத்தரபிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கிரீன் பார்க் மைதானத்தில் கடந்த 27-ம் தேதி தொடங்கியது.
முதல் நாள் ஆட்டம் மழையால் பாதிக்கப்பட்டது. இதனால் ஆட்டம் ஒரு மணி நேரம் தாமதமாக துவங்கியது. முதலில் விளையாடிய வங்கதேசம் 35 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 107 ரன்கள் எடுத்திருந்தபோதும் போதிய வெளிச்சமின்மையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. மொமினுல் ஹக் 40 ரன்களுடனும், முஷ்பிகுர் ரஹீம் 6 ரன்களுடனும் களத்தில் இருந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் 2-வது நாள் ஆட்டம் நடக்கவிருந்தது. ஆனால் 2-வது நாள் ஆட்டம் மழை மற்றும் ஆடுகளத்தில் ஈரமாக இருந்ததால் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. இந்நிலையில் நேற்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற இருந்தது.
ஆனால் கடந்த 2 நாட்களாக பெய்த கனமழையால் மைதானம் ஈரமாக இருந்தது. கள நடுவர்களும், மேட்ச் ரெஃப்ரிகளும் விளையாடுவதற்கு ஏற்ற சூழல் உள்ளதா என காலை முதல் பலமுறை மைதானத்தை சோதனை செய்து வருகின்றனர்.
மைதானத்தை உலர வைக்கும் பணியில் மைதான ஊழியர்களும் ஈடுபட்டனர். ஆனால், பிற்பகல் வரை ஆட்டத்தை நடத்த ஆடுகளம் அனுமதிக்காததால் மூன்றாம் நாள் ஆட்டமும் கைவிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.