சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணையை வெளியிட்டுள்ளது.
பரந்தூர் பகுதியில் 20 கிராமங்களை உள்ளடக்கி பசுமை விமான நிலையம் அமைக்க தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. பரந்தூரில் 5,476 ஏக்கரில் பசுமை விமான நிலையம் அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.
விமான நிலைய அறிவிப்பு வெளியானதில் இருந்து ஏகனாபுரம் கிராம மக்கள் தங்களது விவசாய நிலங்கள், குடியிருப்புகள், நீர்நிலைகள் முற்றிலும் பாதிக்கப்படும் என்று கூறி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
மேலும், கிராம மைதானத்தில் தினமும் ஒன்று கூடி 797வது நாளாக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் நடவடிக்கை எடுக்காமல், விமான நிலையம் கட்ட நிலம் கையகப்படுத்தும் பணி தீவிரமடைந்துள்ளது.
இந்நிலையில், பரந்தூர் விமான நிலையத் திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. ஏகனாபுரம் கிராமத்தில் மொத்தம் 445 ஏக்கர் நிலம் கையகப்படுத்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
நில உரிமையாளர்கள் ஆட்சேபனை இருப்பின் ஒரு மாத காலத்துக்குள் தமது கருத்துக்களை தெரிவிக்கலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.