லண்டன்: 142 ஆண்டுகள் பழமையான இங்கிலாந்தின் கடைசி அனல் மின் நிலையம் மூடப்பட்டது என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
காலநிலை மாற்றம் என்பது இன்றைய உலகம் சந்திக்கும் முக்கிய பிரச்சனையாக உள்ளது. இதனால் புவி வெப்பமயமாதல், அதீத கனமழை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன.
புதுப்பிக்க இயலாத ஆற்றல் மூலம் மின்சாரம் தயாரிப்பதை குறைத்து, சூரிய ஒளி போன்ற புதுப்பிக்கத்தக்க ஆற்றலை பயன்படுத்த உலக நாடுகள் முயற்சிக்கின்றன.
அதன்படி வருகிற 2030-ம் ஆண்டுக்குள் அனைத்து ஆற்றலையும் புதுப்பிக்கத்தக்க ஆதாரங்களில் இருந்து பெற இங்கிலாந்து இலக்கு நிர்ணயித்துள்ளது.
எனவே தலைநகர் லண்டனில் செயல்படும் ராட்கிளிப் அனல் மின் நிலையத்தை மூட அரசாங்கம் முடிவு செய்தது. இதனையடுத்து 142 ஆண்டுகள் பழமைவாய்ந்த இந்த அனல் மின் நிலையம் நேற்றுடன் அதன் பணியை நிறைவு செய்தது.
இதன்மூலம் இங்கிலாந்தில் செயல்பட்டு வந்த கடைசி அனல் மின் நிலையமும் மூடப்பட்டது. இதுகுறித்து எரிசக்தி துறை மந்திரி மைக்கேல் ஷாங்க்ஸ் கூறுகையில், `2030-க்குள் நாட்டின் அனைத்து ஆற்றல்களும் புதுப்பிக்கத்தக்க ஆதாரத்தில் இருந்து பெறுவதற்கான முயற்சியில் இது ஒரு மைல்கல் ஆகும்’ என பாராட்டு தெரிவித்தார்.
இங்கிலாந்தில் 1990-ம் ஆண்டு நாட்டின் மின் உற்பத்தியில் சுமார் 80 சதவீதம் அனல் மின் நிலையம் மூலமே பெறப்பட்டது. பின்னர் படிப்படியாக குறைந்து கடந்த ஆண்டு மின்சார தேவையில் வெறும் 1 சதவீதம் மட்டுமே அனல் மின் நிலையம் மூலம் பெறப்பட்டது.
தற்போது அங்கு காற்று, சூரிய ஒளி மற்றும் இயற்கை எரிவாயு போன்றவை மூலமே பெருமளவில் மின்சாரம் தயாரிக்கப்படுகிறது. இதன்மூலம் நிலக்கரி பயன்பாட்டை ஒழிக்கும் முதல் பெரிய பொருளாதார நாடாக இங்கிலாந்து மாறி உள்ளது.