சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர் விக்கிரமராஜா சென்னையில் நேற்று செயல்தலைவர் ஸ்டாலினை சந்தித்து மனு அளித்தார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் மயிலாப்பூர், பெரம்பூர் பேரக்ஸ் சாலை, தியாகராயநகர், ஆற்காடு சாலை, போரூர் உள்ளிட்ட பகுதிகளில் நீண்ட நாட்களாக மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இதனால் அந்த சாலைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரிகளின் வியாபாரம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே அவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
கார்ப்பரேட் நிறுவனங்கள் தமிழகத்தில் சில்லறை வணிகத்தில் ஈடுபட அரசின் அனுமதி இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். பட்டாசு உரிமங்களை விரைந்து வழங்க வேண்டும்.
தொழில் உரிமத்திற்கு சொத்துவரி ரசீது கட்டாயம் என்ற நடைமுறை தவிர்க்கப்பட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
கூட்டத்தின் மாநில பொதுச் செயலர் வெ.கோவிந்தராஜூலு, கூடுதல் செயலர் வி.பி.மணி, தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத் தலைவர் என்.ஜெகதீசன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.