சென்னை: விமானப்படை தின அணிவகுப்பு 2024-ன் ஒரு பகுதியாக சென்னை மெரினாவில் பறக்கும் மற்றும் ஏரோபாட்டிக் நிகழ்வுகள் 6-ம் தேதி நடைபெறவுள்ளது.
இதில் தமிழக ஆளுநர், தமிழக முதல்வர், விமானப்படைத் தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதனை முன்னிட்டு இன்று முதல் 5-ம் தேதி வரை மெரினா கடற்கரை பகுதியில் ஒத்திகை நடைபெறுகிறது.
விமானப்படை அணிவகுப்பை முன்னிட்டு சென்னை மெரினா கடற்கரை பகுதி நாளை முதல் 6-ம் தேதி வரை சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளில்லா விமானம் உள்ளிட்ட பொருட்களை பறக்கவிட சென்னை மாநகர காவல்துறை தடை விதித்துள்ளது. இந்நிலையில் விமான சாகச நிகழ்ச்சி காரணமாக சென்னை விமான நிலையத்தில் விமான சேவைகள் தாமதமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
விமான நிலைய ஓடுபாதை 15 நிமிடங்கள் முதல் இரண்டு மணி நேரம் வரை பல்வேறு இடைவெளிகளில் மூடப்படும் என்றும், இன்று மதியம் 1:45 முதல் 3.15 மணி வரை ஓடுபாதை மூடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் அக்டோபர் 2, 3, 5, 6, 7 மற்றும் 8 ஆகிய தேதிகளில் கூடுதல் இடைவெளி இருக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பயணிகள் விமான அட்டவணையை சரிபார்த்து அதற்கேற்ப பயணங்களை திட்டமிடுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.