புதுடெல்லி: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ‘எக்ஸ்’ தளத்தில் நேற்று வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:-
மேற்கு ஆசியாவில் நடந்து வரும் போருக்கு மத்தியில், 15,000 இந்திய தொழிலாளர்களை இஸ்ரேலுக்கு அனுப்பும் பணியில் பிரதமர் மோடி அரசு ஈடுபட்டுள்ளது.
இதற்கு முன், பல இந்திய இளைஞர்கள் போலி ஏஜென்டுகளால் ஏமாற்றப்பட்டு ரஷ்யா-உக்ரைன் போரில் ஈடுபட்டுள்ளனர். அவர்களில் பலர் உயிர் இழந்தனர். மோடி அரசின் இளைஞர்களுக்கு எதிரான கொள்கைகளால் வேலையில்லாத் திண்டாட்டத்தை இது காட்டுகிறது.
போர்ப் பகுதியில் வேலைக்குச் செல்லத் துணியும் இந்திய இளைஞர்கள், வேலைகள் குறித்த பிரதமர் மோடியின் தகவல்கள் போலியானவை என்பதைக் காட்டுகிறது. மேலும் தனது அரசாங்கத்தின் தோல்விகளை மறைக்க அவர் இவ்வாறு கூறுகிறார் என்பதையே இது காட்டுகிறது.
இவ்வாறு மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.