திருமலை: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள காங்கிரஸ் அலுவலகத்தில் மாநில காங்கிரஸ் தலைவர் ஒய்.எஸ்.ஷர்மிளா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-
காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை துணை முதல்வர் பவன் கல்யாண் விமர்சிப்பது கேலிக்கூத்தானது. ஆட்சிக்கு வந்த பின் பவன் கல்யாணின் உடை, பேச்சு மாறிவிட்டது.
அனைத்து சமூகங்களுக்கும் நீதி கிடைக்க முதல்வர் பாடுபட வேண்டும். அனைத்து மதங்களையும் சமமாக நடத்த வேண்டும். ஆனால் அவர் ஒரு மதத்தின் பிரதிநிதியாக செயல்படுகிறார்.
பிரதமர் நரேந்திர மோடியின் இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்து வருகிறார். ஜனசேனாவை மதச்சார்பற்ற கட்சி என்று நினைத்தேன். ஆனால் பவன் கல்யாணும் ஆர்எஸ்எஸ் சித்தாந்தத்துடன் செல்கிறாரா?
மணிப்பூரில் கிறிஸ்தவர்கள் தாக்கப்பட்டபோது பவன் கல்யாண் ஏன் பேசவில்லை? மற்ற மதத்தினரும் வாக்களித்ததால் தான் பவன் கல்யாண் துணை முதல்வர் பதவியை பெற்றுள்ளார் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.