தமிழ்நாட்டில் உள்ள முக்கிய அணைகளில் இருந்து கால்வாய்களில் குறிப்பிட்ட தேதியில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிடுவது வழக்கம். அந்த வகையில் முல்லைப் பெரியாறு அணையிலிருந்து தேனி மாவட்டத்தில் உள்ள 18ம் கால்வாய், பிடிஆர் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக அக்டோபர் 2ம் தேதி தண்ணீர் திறக்கப்படுவது வழக்கம்.
ஆனால் இதுநாள் வரை தண்ணீர் திறக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கையில், 18ஆம் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம் உத்தமபாளையம் மற்றும் போடிநாயக்கனூர் வட்டாரங்களுக்கு உட்பட்ட 4,614 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறும் என குறிப்பிட்டார்.
பிடிஆர் கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாயில் தண்ணீர் திறக்கப்படுவதன் மூலம், தேனி மற்றும் உத்தமபாளையம் பகுதிகளில் உள்ள 5,146 ஏக்கர் நிலமும் பாசன வசதி பெறும் என மொத்தம் 9,760 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.
அப்பகுதி விவசாயப் பெருங்குடி மக்கள் இது குறித்து மாவட்ட நிர்வாகத்திடமும், நீர்வளத் துறை மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகளிடமும் தெரிவித்தும் எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் ஓ.பன்னீர்செல்வம் குற்றம்சாட்டினார்.
2023 ஆம் ஆண்டு, தேனி மாவட்டம், பங்களாமேடு பகுதியில் மாவட்ட நிர்வாகம் மற்றும் நீர்வளத் துறை மற்றும் பொதுப் பணித் துறை அதிகாரிகளைக் கண்டித்தும், அரசின் கவனத்தை ஈர்த்து விவசாயிகள் சங்கம் சார்பில் போராட்டம் நடத்தப்பட்ட நிலையில், டிசம்பர் மாதத்தில்தான் தண்ணீர் திறந்துவிடப்பட்டது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த ஆண்டும், டிசம்பர் மாதம் தான் மேற்படி கால்வாய்களுக்கு அரசு தண்ணீர் திறந்துவிடுமோ என்ற அச்சம் விவசாயப் பெருங்குடி மக்களிடையே நிலவுகிறது என்று குறிப்பிட்ட ஓபிஎஸ், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து கால்வாய்களில் உடனடியாக தண்ணீர் திறக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
மேலும், விவசாயப் பெருங்குடி மக்களின் கோரிக்கையினை நிறைவேற்றும் வகையில், முல்லைப் பெரியாறு அணையிலிருந்து பதினெட்டாம் கால்வாய், பி.டி.ஆர். கால்வாய் மற்றும் தந்தை பெரியார் கால்வாய்களில் பாசனத்திற்காக தண்ணீர் திறந்துவிட மாவட்ட நிர்வாகத்திற்கு உடனடியாக உத்தரவிட வேண்டும் என முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு வலியுறுத்தியுள்ளார்.
இதேபோல விவசாயிகளும் முல்லை பெரியாறு அணையை திறக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ள நிலையில், தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுக்கும் என்பதை பார்ப்போம்.