டெல் அவிவ்: இஸ்ரேல் மீது ஹமாஸ் தாக்குதல் நடத்தி இன்றுடன் (அக். 07) ஓராண்டு நிறைவடைகிறது. இதனை முன்னிட்டு லெபனான் எல்லையில் உள்ள இஸ்ரேல் ராணுவ முகாம்களை பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நேற்று பார்வையிட்டார்.
அவர் தனது X தளத்தில் கூறியதாவது:-
“நான் வடக்கு எல்லையில் இஸ்ரேலிய தற்காப்புப் படை வீரர்களைச் சந்தித்தேன். அங்கிருந்து சில மீட்டர் தொலைவில் எல்லைக் கோட்டைத் தாண்டி, அவர்களது நண்பர்கள் ஹிஸ்புல்லா எங்கள் முகாம்களைத் தாக்கத் தயாரான உள்கட்டமைப்பை அழித்து வருகின்றனர்.
நான் அவர்களிடம் சொன்னேன்: நீங்கள் வெற்றியாளர்கள். நீங்களும் உங்கள் நண்பர்களும் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளும் காஸாவில் உள்ள வீரர்களும் அற்புதங்களைச் செய்கிறீர்கள்.
நீங்கள் சிங்கங்களைப் போன்றவர்கள். ஒரு வருடத்திற்கு முன்பு நாங்கள் ஒரு பெரிய தாக்குதலை சந்தித்தோம். கடந்த 12 மாதங்களில் யதார்த்தத்தை முற்றிலும் மாற்றிவிட்டோம்.
எங்கள் எதிரிகள் மீது நீங்கள் கட்டவிழ்த்து விடுகிற தாக்குதலைக் கண்டு உலகமே சிரிக்கிறது. உங்களுக்கு என் வணக்கம். நீங்கள் வெற்றியின் தலைமுறை என்று நான் உங்களுக்குச் சொல்கிறேன். இணைந்து போராடுவோம். கடவுளின் உதவியால் வெற்றி நமக்கே” என்று நெதன்யாகு கூறினார்.
பாலஸ்தீனத்தில் காஸாவை ஆட்சி செய்த ஹமாஸ் கடந்த ஆண்டு அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் எல்லைக்குள் நுழைந்து கொடூரத் தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடியாக இஸ்ரேல் ராணுவம் காசா பகுதியில் தரைவழி தாக்குதலை நடத்தியது.
இஸ்ரேல் ராணுவம் மற்றும் ஹமாஸ் இடையே ஒரு வருடமாக போர் நடந்து வருகிறது. இதனிடையே, ஹமாஸுக்கு ஆதரவாக மத்திய கிழக்கின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த குழுக்கள் இஸ்ரேலை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றன.
அவர்களுக்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது.