குன்னூர்: வடகிழக்கு பருவமழை துவங்கியுள்ளதால், வண்ணத்துப்பூச்சிகள் இடம் பெயர்கின்றன. அதன்படி தற்போது மேற்கு தொடர்ச்சி மலையை நோக்கி வண்ணத்துப்பூச்சிகள் இடம் பெயர்ந்து வருகின்றன.
நீலகிரி மாவட்டம் குன்னூரில் அதிகபட்சமாக 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்த காலநிலை பட்டாம்பூச்சிகளுக்கு ஏற்றது. குன்னூர் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு 20 வகையான வண்ணத்துப்பூச்சிகள் வருகை தந்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அவர்கள் கூறும்போது, “காட்டேரி பூங்கா பகுதிகளில் உள்ள பூக்களை உண்பதற்காக நீலப்புலி, லிம்னியாஸ் எனப்படும் வண்ணத்துப்பூச்சிகள் ஆயிரக்கணக்கில் வருகின்றன.
இது பெரிய இறக்கைகள் கொண்ட பட்டாம்பூச்சி. இது 90 முதல் 100 மில்லிமீட்டர் வரை இறக்கைகள் கொண்டது. இந்த வண்ணத்துப்பூச்சிகளை காட்டேரி பூங்காவில் பார்க்கவும், செல்போனில் படம் எடுக்கவும் சுற்றுலா பயணிகள் ஆர்வமாக உள்ளனர்,” என்றார்.