சென்னை: ஆவின் ஐஸ்கிரீம் ரகத்தின் விலையை உயர்த்தியுள்ளது. தமிழக அரசின் கூட்டுறவு பால் நிறுவனமான ஆவினில், 100-க்கும் மேற்பட்ட ஐஸ்கிரீம் வகைகளை தயாரித்து, தமிழகம் முழுவதும் விற்பனை செய்து வருகிறது.
இந்நிலையில், ஆவின் ஐஸ்கிரீம் ரகங்களின் விற்பனை விலையை ஆவின் நிறுவனம் உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு கடந்த 1-ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. 50 மில்லி வெண்ணிலா, மாம்பழம், ஸ்ட்ராபெரி வகைகள் ரூ.10-ல் இருந்து ரூ.15 ஆகவும், சாக்லேட், பிஸ்தா வகைகள் ரூ.12-ல் இருந்து ரூ.18 ஆகவும் அதிகரித்துள்ளது.
65 மி.லி. காக்கோ பார் ரூ.25-ல் இருந்து ரூ.30 ஆகவும், காக்கோ பீஸ்ட் ரூ.30-ல் இருந்து ரூ.40 ஆகவும் அதிகரித்துள்ளது. 70 மில்லி குல்பி பார் ரூ.30 முதல் ரூ.40, 100 மி.லி. கிளாசிக் கோனும் ரூ.35-ல் இருந்து ரூ.45 ஆக அதிகரித்துள்ளது.
100 மில்லி வெண்ணிலா, மாம்பழம் மற்றும் ஸ்ட்ராபெரி வகைகள் ரூ.20-ல் இருந்து ரூ.25 ஆகவும், சாக்லேட், பிஸ்தா, பாதாம், பட்டர் ஸ்காட்ச் வகைகள் ரூ.22-ல் இருந்து ரூ.30 ஆகவும், ட்ரை புரூட்ஸ் ரூ.25-ல் இருந்து ரூ.35 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
125 மி.லி. மில்க் ஐஸ்கிரீம் ரூ.30 முதல் ரூ.40, கசாட்டா ரூ.45ல் இருந்து ரூ.65, லவ்லி லிச்சி, ஸ்ட்ராபெர்ரி, சாக்லேட், பட்டர் ஸ்காட்ச் வகைகள் ரூ.40 முதல் ரூ.60, பிளாக் கரண்ட் பிளாஸ்ட், சாக்லேட் மேனியா வகைகள் ரூ. 45 முதல் ரூ.60 வரை மற்றும் பிஸ்தா பேஷன் ரூ.55 முதல் ரூ.75 ஆகவும் உயர்த்தப்படுள்ளது.
தவிர, 1000 மி.லி. வெண்ணிலா, மாம்பழம், பட்டர் ஸ்காட்ச் ரூ.150-ல் இருந்து ரூ. 220, சாக்லேட் ரூ.170-ல் இருந்து ரூ.250, பிஸ்தா ரூ.175-ல் இருந்து ரூ.250, பாதாம் மற்றும் பட்டர் ஸ்காட்ச் ரூ.180-ல் இருந்து ரூ.250. ஆகவும் விற்பனை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
இது தவிர 250 மி.லி., 500 மி.லி. ஐஸ்கிரீம் வகைகளின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து தமிழ்நாடு பால் முகவர்கள் நல சங்க தலைவர் பொன்னுசாமி கூறியதாவது:-
பால் கொள்முதல் விலை உயர்வு இல்லாத இந்த நேரத்தில், ஐஸ்கிரீம் விற்பனை விலையை உயர்த்துவதை ஏற்க முடியாது. அதே சமயம் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அரசு அறிவிக்கும் போது, ஐஸ்கிரீம் உள்ளிட்ட அனைத்து வகையான பால் பொருட்களின் விற்பனை விலையையும் உயர்த்துவதுதான் சரியான நடைமுறையாக இருக்க முடியும்.
திருமணம், பிறந்தநாள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பயன்படுத்தக்கூடிய 4,500 மி.லி. மொத்தமாக ஐஸ்கிரீம் வகைகளின் விலை ரூ.80-ல் இருந்து ரூ.100 ஆக குறைக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறினார்.