ஒவ்வொரு ஆண்டும் மத்திய அரசு இந்திய திரைப்பட தயாரிப்பாளர்களை ஊக்குவிக்கும் வகையில் தேசிய விருதுகளை வழங்கி கவுரவித்து வருகிறது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 70-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்பட்டன.
2022-ல் வெளியான சிறந்த படங்கள், நடிகர்கள், நடிகைகள், இயக்குனர்கள், சிறந்த இசையமைப்பாளர்கள் என பல விருதுகள் அறிவிக்கப்பட்டன. இந்திய அளவில் சிறந்த படமாக மலையாளத்தில் வெளியான ‘ஆட்டம்’ தேர்வு செய்யப்பட்டது.
‘காந்தாரா’ படத்திற்காக ரிஷப் ஷெட்டிக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டது. சிறந்த நடிகைக்கான விருதை ‘திருச்சிற்றம்பலம்’ படத்திற்காக நித்யா மேனன் மற்றும் ‘கட்ச் எக்ஸ்பிரஸ்’ படத்திற்காக மானசி பரேக் இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
சிறந்த இயக்குனருக்கான விருதை ‘ஊஞ்சாய்’ இந்தி படத்தை இயக்கிய சூரஜ் ஆர். பர்ஜாத்யா தேர்ந்தெடுக்கப்பட்டார். மணிரத்னம் இயக்கிய ‘பொன்னியின் செல்வன் 1’ திரைப்படம் சிறந்த தமிழ்த் திரைப்படம், சிறந்த ஒளிப்பதிவு (ரவிவர்மன்), பின்னணி இசை (ஏ.ஆர். ரஹ்மான்), ஒலிப்பதிவு (ஆனந்த் கிருஷ்ணமூர்த்தி) ஆகிய பிரிவுகளில் 4 விருதுகளை வென்றது.
‘கேஜிஎஃப் 2’ படத்துக்காக சிறந்த சண்டை பயிற்சியாளருக்கான விருது தமிழகத்தைச் சேர்ந்த அன்பறிவ் சகோதரர்களுக்கு அறிவிக்கப்பட்டது.
‘திருச்சிற்றம்பலம்’ படத்தின் ‘மேகம் கருகாதா’ பாடலுக்கு நடன இயக்குனர்கள் சதீஷ் கிருஷ்ணன் மற்றும் ஜானி மாஸ்டர் தேர்வு செய்யப்பட்டனர். போக்ஸோ வழக்கில் ஜானி மாஸ்டர் கைது செய்யப்பட்டு விருது ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில், டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் நேற்று விருதுகள் வழங்கப்பட்டன. ஜனாதிபதி திரவுபதி முர்மு விருதுகளை வழங்கினார். சிறந்த நடிகருக்கான விருதை ரிஷப் ஷெட்டி, சிறந்த நடிகைக்கான விருதை நித்யா மேனன், மானசி பரேக், சண்டைப் பயிற்சியாளர்கள் அன்பரிவ் சகோதரர்கள், நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் ஆகியோர் குடியரசுத் தலைவரிடமிருந்து பெற்றுக்கொண்டனர்.
‘பொன்னியின் செல்வன் 1’ படத்திற்காக தயாரிப்பாளர் சுபாஸ்கரன் மற்றும் இயக்குனர் மணிரத்னம் விருது பெற்றனர். இந்தப் படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான விருதை ஏ.ஆர்.ரஹ்மான் பெற்றார்.
இது அவருக்கு 7-வது தேசிய விருது. ‘பிரம்மாஸ்திரா-பாகம் 1’ என்ற இந்தி படத்திற்காக, ப்ரீதம் சக்ரவர்த்திக்கு சிறந்த இசைக்கான விருது வழங்கப்பட்டது.
‘கேஜிஎஃப் 2’ படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூரின் மனைவிக்கு ‘சிறந்த கன்னட படத்துக்கான தேசிய விருது’ கிடைத்தது. ‘குல்மொஹர்’ இந்தி படத்தில் நடித்ததற்காக நடிகர் மனோஜ் பாஜ்பாய்க்கு சிறப்பு ஜூரி விருது வழங்கப்பட்டது.
இது அவருக்கு 4-வது தேசிய விருது. விழாவில் மூத்த நடிகர் மிதுன் சக்ரவர்த்திக்கு தாதா சாகேப் பால்கே வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. விழாவில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏ.ஆர்.ரஹ்மான் 7-வது முறையாக தேசிய விருதை வென்றது குறித்து இயக்குநர் மணிரத்னத்தின் கேள்விக்கு, “பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளார். முதல் படத்திலிருந்தே தற்போது வரை அவருக்கு அங்கீகாரமும் பாராட்டும் கிடைத்து வருவது ஆச்சரியமாக உள்ளது” என்றார்.
விருது கிடைத்தது குறித்து பேசிய நித்யா மேனன், “முதன்முறையாக தேசிய விருது பெற்றதில் மகிழ்ச்சி. இதுவரையிலான எனது நடிப்புக்கு கிடைத்த அங்கீகாரமாகவே பார்க்கிறேன். ஒரு நடிகையாக இந்த விருது முக்கியமானது.
இதை எனது படக்குழுவினருக்கு சமர்ப்பிக்கிறேன். தனுஷுடன் மீண்டும் நடிப்பேன்” என்றார்.