ராமேஸ்வரம்: பாம்பன் புதிய ரயில்வே பாலம் திறப்பது குறித்து ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வுக்கு பின் உறுதியான அறிவிப்பு வெளியிடப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அருகே பாம்பன் பாக் ஜலசந்தி கடலில் ரூ.550 கோடி செலவில் புதிய இரட்டை ரயில் பாதை மின்சார ரயில் பாலம் கட்டும் பணி நிறைவடைந்துள்ளது.
இந்தியாவின் முதல் செங்குத்து தொங்கு பாலத்தின் தற்போதைய சோதனைகளும் சில நாட்களில் நிறைவடையும். இன்ஜினியரிங், எலக்ட்ரிக்கல், சிக்னல், சென்சார் அமைப்பு உள்ளிட்ட துறைகளில் சோதனையின் போது கண்டறியப்பட்ட திருத்தங்கள் நடந்து வருகின்றன.
பாம்பன் புதிய ரயில் பாலம் இம்மாதம் திறக்கப்பட உள்ளதாக தொடர்ந்து செய்திகள் வெளியாகின. இந்த நிலையில் ரயில்வே பாதுகாப்பு ஆணையம் ஆய்வுக்கு பின் புதிய பாலம் திறப்பது குறித்து உறுதியான அறிவிப்பு வெளியிடப்படும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் அதிகாரிகள், பாலத்தின் திறப்பு விழாவை அறிவிப்பதற்காக புதிய ரயில்வே பாலத்தின் இறுதி ஆய்வுக்கு தயாராகி வருகின்றனர்.