சென்னை: அரபிக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் வரும் 15-ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுகுறித்து, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:-
லட்சத்தீவு மற்றும் அதை ஒட்டிய அரபிக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. அதே சமயம் குமரி கடல் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
இலங்கை மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று முதல் 15-ம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும்.
இன்று (10-ம் தேதி) சேலம், கிருஷ்ணகிரி தர்மபுரி, திருப்பத்தூர், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கரூர், திருச்சி, திண்டுக்கல் மாவட்டங்களிலும், நாளை (11-ம் தேதி) மதுரை, விருதுநகர், சிவகங்கை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்ய வாய்ப்புள்ளது.
நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கரூர், மாயனூரில் 8 செ.மீ மழை பதிவாகியுள்ளது. பெரம்பலூர், கோவை மாவட்டம் மாகினம்பட்டி, திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில், திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் ஆகிய இடங்களில் 7 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
இவ்வாறு கூறப்பட்டுள்ளது.