சென்னை: சாம்சங் தொழிலாளர்கள் பிரச்னை குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று எக்ஸ் தளத்தில் வெளியிட்ட பதிவு:-
காஞ்சிபுரம் மாவட்டம் சுங்குவார்சத்திரத்தில் சாம்சங் நிறுவன ஊழியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தொழிலாளர்கள், நிறுவனம் மற்றும் அரசு இடையே நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தையில் முழுமையான தீர்வு எட்டப்படாத நிலையில், தொழிலாளர்கள் அதை முற்றாக நிராகரித்து போராட்டத்தை தொடர்கின்றனர்.
இந்நிலையில், நேற்று காலை பேருந்துகளில் ஏறிய போலீஸார், சாம்சங் தொழிலாளர்கள் இருப்பதை சோதனை செய்து, நள்ளிரவில் வீட்டுக்குள் புகுந்து கைது செய்த செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
சர்ச்சைகள் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டும். இதுபோன்ற தொழிலாளர் விரோத செயல்களில் ஈடுபடாமல், தமிழக அரசு மீண்டும் தலையிட்டு, கைதான தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்து, உரிய பேச்சுவார்த்தை மூலம் பிரச்னையை சுமூகமாக தீர்க்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.