சிவகங்கை: ”ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை மாற்ற, முதல்வர் பரிசீலிப்பார்,” என, ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மதிவேந்தன் கூறினார்.
சுதந்திர போராட்ட தியாகி குயிலியின் நினைவு தினத்தை முன்னிட்டு இன்று சிவகங்கையில் உள்ள சுதந்திர போராட்ட வீரர் வேலுநாச்சியார் மணிமண்டபத்திற்கு அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
திமுக சார்பில் அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், மதிவேந்தன், தமிழரசி எம்எல்ஏ, மானாமதுரை நகராட்சி தலைவர் மாரியப்பங்கென்னடி, திருப்புவனம் பேரூராட்சி தலைவர் செங்கை மாறன் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
பின்னர் அமைச்சர் மதிவேந்தன் நிருபர்களிடம் கூறும்போது, “ஆதி திராவிடர் நலத்துறையின் பெயரை மாற்றுவது குறித்து முதல்வர் பரிசீலிப்பார். இது ஆதி திராவிடர் நலத்துறை என்ற பெயரில் இருந்தாலும், அனைத்து பட்டியல் சாதியினர் மற்றும் பழங்குடியினர் நலனுக்காக செயல்படுகிறது.
முதல்வர் மு.க.ஸ்டாலின் பதவியேற்ற பின், சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டு, ஆதி திராவிடர் இல்லங்கள், மாணவர் விடுதிகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன.
ஆதி திராவிடர்களுக்கான நிதி முறையாக செலவிடப்படாமல் திருப்பி அனுப்பப்படுகிறது என்று கூறுவது முற்றிலும் தவறானது. ஆதி திராவிட மற்றும் பழங்குடியினருக்கு விரைவில் நலத்திட்டங்களை கொண்டு வர நடவடிக்கை எடுத்து வருகிறோம்,” என்றார்.
முன்னதாக, அ.தி.மு.க., சார்பில், செந்தில்நாதன் எம்.எல்.ஏ., நகர செயலாளர் என்.எம்.ராஜா உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.