நாக்பூர்: மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமையகத்தில் நேற்று விஜயதசமி விழா கொண்டாடப்பட்டது. ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் கூறியதாவது:-
வங்கதேசத்தில் இந்துக்கள் தாக்கப்படுகின்றனர். இந்தியா மட்டுமின்றி உலகமே அவர்களுக்கு உதவ வேண்டும். கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவமனை பெண் மருத்துவர் மரணம் வெட்கக்கேடான செயல். எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும்.
தர்மம் ஒரு மதம் அல்ல. இது இந்தியாவின் சின்னம். இஸ்ரேலிய இராணுவத்திற்கும் ஹமாஸுக்கும் இடையிலான போரின் உலகளாவிய தாக்கம் குறித்து கவலை அதிகரித்து வருகிறது.
நாம் பலதரப்பட்ட சமூகத்தில் வாழ்கிறோம். இதில் பிளவை ஏற்படுத்த சிலர் முயற்சிக்கின்றனர். வால்மீகியும் ரவிதாஸும் ராமாயணத்தை முழு இந்து சமூகத்திற்காகவும் எழுதினார்கள்.
இவ்விரு புனிதர்களின் பிறந்தநாளையும் ஒன்றாகக் கொண்டாட வேண்டும். இதில் எந்த பிரிவினையும் அனுமதிக்கக்கூடாது. சாதி பிரிவினைகளுக்கு இந்துக்கள் இடம் கொடுக்கக் கூடாது. இந்துக்கள் தலித் மற்றும் பலவீனமான மக்களுக்கு ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.