அமராவதி: ஆந்திராவில் 175 சட்டப் பேரவை மற்றும் 25 மக்களவைத் தொகுதிகளுக்கு மே 13ஆம் தேதி ஒரே நாளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் வேட்பாளரும், மசர்லா சட்டமன்ற முன்னாள் எம்எல்ஏவுமான பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி தனது ஆதரவாளர்களுடன் பால்வாய்கேட் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சாவடிக்குள் நுழைந்து தரையில் இருந்த வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்து கலவரக்காரர் போல் நடந்து கொண்டார்.
இவை அனைத்தும் அங்கிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து மறுநாள் 14ம் தேதி பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி, அவரது தம்பி வெங்கட்ராமி ரெட்டி மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் கரம்பூடி நகரில் அராஜகம் செய்தனர். பொதுமக்கள் சோடா பாட்டில்களை வீசி கற்களை வீசி தாக்கினர். தடுத்து நிறுத்திய இன்ஸ்பெக்டர் நாராயணசாமியையும் தாக்கினர். இதையடுத்து, போலீசார் தடியடி நடத்தியும், கண்ணீர் புகை குண்டுகளை வீசியும் அவர்களை கலைத்தனர். இதையடுத்து அவர்கள் மீது 14 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அதில் 4 கொலை மிரட்டல் வழக்குகள்.
இந்நிலையில், அவர்கள் அனைவரும் தலைமறைவாகினர். ஆனால் பின்னெல்லி ராம கிருஷ்ண ரெட்டி தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி முன்ஜாமீன் பெற்றனர். அவர்களுக்கு நீதிமன்றம் இடைக்கால ஜாமீனும் வழங்கியது.
இந்நிலையில், ஜாமீன் மனு ஆந்திர உயர்நீதிமன்றத்தில் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த வழக்கு உள்ளிட்ட வழக்குகளில் பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டி, அவரது சகோதரர் மற்றும் ஆதரவாளர்களின் இடைக்கால ஜாமீனை ரத்து செய்து நேற்று மதியம் உத்தரவு பிறப்பித்தது. இதையடுத்து பின்னெல்லி ராமகிருஷ்ண ரெட்டியை கைது செய்த போலீசார், மருத்துவ பரிசோதனைக்கு பின் நேற்று மாலை குண்டூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரது தம்பி வெங்கட்ராமி ரெட்டி மற்றும் சிலர் தலைமறைவாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.