சென்னை: எப்போதும் பெண்களுக்கு தங்களின் அழகை வெளிப்படுத்திக் காட்டுவதில் அதிக ஆர்வமும் ஏன் போட்டியும் கூட உள்ளது. இயற்கையாக உள்ள அழகை இயற்கையிலேயே கிடைக்கும் பொருட்களை கொண்டு எப்படி மேலும் அழகாக்கி கொள்ளலாம் என்பதை பாருங்கள்.
இயற்கையை மீறி சில செயற்கைத் தனங்களைச் செய்வதன் மூலம் தம்முடைய அழகை வெளிப்படுத்த எத்தனை முயற்சிகளில் இறங்கி பரீசித்துப் பார்ப்பவர்கள் இன்று ஏராளம். இதில் ஆண் பெண் என்ற பேதம் இல்லை…
இயற்கையான முறையில், இயற்கையில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே நம்முடைய உடலழகைப் பேண முடியும். பாலில் பேரிச்சம் பழத்தை கலந்து பருகிவர நகங்கள் கூடுதல் பலமடைவதோடு, உடைவதும் குறையும். பாதாம் எண்ணையை நகத்தில் தடவி வர நகங்களுக்கு கூடுதல் பளபளப்பு கிடைக்கும்.
நன்கு பழுத்த பப்பாளிப் பழத்தை முகத்தில் பூசி சிறிது நேரம் கழித்து உங்கள் முகத்தை கழுவிப் பாருங்கள். சும்மா பளபளவென்று மின்னும். இதேபோல் பயத்தம்பருப்பு மாவுடன், தர்பூசணி பழச்சாற்றைக் கலந்து, அக்கலவையை முகத்தில் பூசி வர உங்கள் முகம் பொலிவு பெறுவது உறுதி.
நிறையப் பெண்கள் செய்யும் தவறே என்ன தெரியுங்களா? அழகாக முகத்தை பராமரிக்க தெரிந்தவர்கள் கழுத்தை ஒரு பொருட்டாகவே மதிக்க மாட்டார்கள். இதனால் கழுத்து கருத்துப்போய் முகம் மட்டும் பொலிவாக காட்சி தரும்.
இந்த குறையை போக்க சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிது வெங்காயச்சாறு, ஆலிவ் எண்ணெய் இரண்டு சொட்டு, இவற்றுடன் சிறிதளவு பயத்த மாவு கலந்து கழுத்தைச் சுற்றி பூசிவிடுங்கள். பத்து நிமிடம் கழித்து கழுத்திலிருந்து தாடை நோக்கி இலேசாக மசாஜ் செய்துவிடுங்கள். இவ்வாறு தொடர்ந்து செய்ய நாளடைவில் உங்கள் கழுத்தும் கருமை நிறம் நீங்கி பள பளக்கும்.
ஒரு ஸ்பூன் ஈஸ்ட்டுடன், முட்டைகோசின் இலையில் சாறு எடுத்து கலந்துகொள்ளுங்கள். அதில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து சருமம் எங்கும் பூசி வர சூரிய ஒளியால் கருமை அடைந்த தோலின் நிறம் இயற்கை நிறத்திற்கு மாறிவிடும். முன்பு இருந்ததைவிட சருமத்தில் நிறம் சிவப்பாக காட்சியளிக்கும்.