சென்னை: கடந்த 2004-ம் ஆண்டு தொடங்கப்பட்ட முன்னணி மொபைல் போன் நிறுவனமான பூர்விகா, தற்போது தமிழகம் மட்டுமின்றி தென்னிந்தியா முழுவதும் 400-க்கும் மேற்பட்ட கிளைகளுடன் செயல்பட்டு வருகிறது.
இந்த நிறுவனத்தின் உரிமையாளர் யுவராஜ் நடராஜன். சென்னை கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் பூர்விகா நிறுவனத்தின் முதன்மைக் கிளை செயல்பட்டு வருகிறது. இந்த விற்பனை நிறுவனம் மூலம் செல்போன், டேப்லெட் மற்றும் டிவி, ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின், ஏசி போன்றவை விற்பனை செய்யப்படுகிறது.
எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் நேற்று காலை 7 மணி முதல் 10-க்கும் மேற்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். கடையில் ஏற்கனவே பணிபுரியும் ஊழியர்களைத் தவிர புதிதாக வந்த பணியாளர்கள் உள்ளே செல்ல அனுமதிக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
மேலும், சென்னை பள்ளிக்கரணையில் உள்ள பூர்விகா உரிமையாளர் யுவராஜ் நடராஜனின் வீடு மற்றும் இந்த நிறுவனத்துடன் தொடர்புடைய மற்றொரு இடம் உள்ளிட்ட 3 இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது.
வரி ஏய்ப்பு புகாரின் அடிப்படையில் நடத்தப்பட்ட சோதனை இரண்டாவது நாளாக இன்றும் தொடர்கிறது. சென்னையில் பூர்விகா நிறுவன உரிமையாளரின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய பல இடங்களில் சோதனை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.