கொல்கத்தா: ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மூத்த பெண் பயிற்சி மருத்துவர் கொலைக்கு நீதி கேட்டு போராட்டம் நடத்தி வரும் பயிற்சி மருத்துவர்கள், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற அக்டோபர் 21-ம் தேதிக்குள் மேற்கு வங்க அரசுக்கு கெடு விதித்துள்ளனர்.
தவறினால் வரும் அக்டோபர் 22-ம் தேதி மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளனர். போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்களில் ஒருவரான தேபாஷிஷ் ஹல்தார் நிருபர்களிடம் கூறுகையில், “முதல்வர் மம்தா பானர்ஜி எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால், அனைத்து அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்ள இளநிலை மற்றும் மூத்த மருத்துவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவார்கள்.
செவ்வாய்க்கிழமை (அக் 22) மாநிலம் தழுவிய வேலை நிறுத்தம். எங்கள் சகாக்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். வரும் திங்கட்கிழமைக்குள் (அக்டோபர் 21) நடவடிக்கை எடுக்காவிட்டால், செவ்வாய்கிழமை முதல் நாங்களும் போராட்டத்தில் ஈடுபடுவோம்” என்றார். இவ்வாறு அவர் கூறினார்.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மற்றொரு பயிற்சி மருத்துவர் சயந்தனி கோஷ் ஹஸ்ரா கூறுகையில், “எங்கள் உண்ணாவிரதப் போராட்டம் 14 நாட்களாக நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜி இதுவரை ஏன் அவர்களை சந்திக்கவில்லை.
அவர் இந்த மாநிலத்தின் பாதுகாவலர். நாம் அவருடைய பிள்ளைகளைப் போன்றவர்கள். எங்கள் நியாயமான கோரிக்கைகளுக்காக அவர் ஒரு முறையாவது எங்களைச் சந்திக்க வேண்டாமா?” ஹஸ்ரா அக்டோபர் 5 முதல் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
உயிரிழந்த பெண் பயிற்சி மருத்துவருக்கு நீதி வழங்க வேண்டும், மாநில சுகாதாரத்துறை செயலரை மாற்ற வேண்டும், மருத்துவமனைகளில் மருத்துவர்களுக்கு போதிய வசதிகள் செய்து தர வேண்டும், அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 10 கோரிக்கைகளை வலியுறுத்தி இளநிலை மருத்துவர்கள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
பயிற்சி மருத்துவர்களின் போராட்டத்துக்கு ஆதரவாக ஆர்.ஜி.கர் மருத்துவமனையின் மூத்த மருத்துவர்கள் 50 பேர் கடந்த 8-ம் தேதி ராஜினாமா செய்தனர். கொல்கத்தாவின் மையப்பகுதியில் நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டத்திலும் அவர்கள் கலந்து கொள்கின்றனர்.
முன்னதாக ஆகஸ்ட் 9 -ம் தேதி, ஆர்ஜி கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் துன்புறுத்தல் மற்றும் கொலையைத் தொடர்ந்து, பயிற்சி மருத்துவர்கள் 42 நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களுக்கு மாநில அரசு உறுதியளித்ததையடுத்து செப்டம்பர் 21-ம் தேதி போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. ஆனால், அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று மருத்துவர்கள் குற்றம் சாட்டினர்.