ராமேஸ்வரம்: ராமேசுவரம் அருகே பாம்பன் கடலில் ரூ.550 கோடியில் புதிதாக அமைக்கப்பட்ட இரட்டை ரயில் பாதை மின்சார ரயில் பாலத்தின் பணிகள் முடிவடைந்துள்ள நிலையில், பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் தினமும் ஆய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
கால்வாய் மேலே உள்ள 700 டன் செங்குத்து தூக்குப்பாலம், அக்டோபர் 1-ம் தேதி சோதனைக்காக உயர்த்தப்பட்டு இறக்கப்பட்டது. தொங்கு பாலத்தை 17 மீட்டராக உயர்த்தி இறக்கி 18 முறை முழுமையாக சோதனை செய்யப்பட்டது. ரயில்வே பாதுகாப்பு ஆணையத்தின் ஆய்வுக்கு தயாராக உள்ள புதிய ரயில்வே பாலத்தை ரயில்வே விகாஸ் நிகாம் லிமிடெட் நிறுவனத்தின் தலைவர், நிர்வாக இயக்குனர் பிரதீப் கவுர் நேற்று ஆய்வு செய்தார்.
பணியை விரைவாகவும், அசம்பாவிதமும் இன்றி வெற்றிகரமாக முடித்த பொறியாளர்களை பாராட்டி, தற்போதைய நிலவரத்தை கேட்டறிந்தார். ஓஹெச்இ ஆய்வு ரயில் இயக்கப்பட்டு புதிய ரயில் பாலத்தில் ரயிலை இயக்க அமைக்கப்பட்ட மின்பாதை சோதனை செய்யப்பட்டது. ஓவர் ஹெட் உபகரணங்களின் (OHE) நிலையை சரிபார்க்க ரயில் இயக்கப்பட்டது.
இதில் காண்டாக்ட் ஒயர், கேட்டர்னரி வயர், டிராப்பர் வயர், இந்த ஒயர்களை தாங்கி நிற்கும் கேன்டிலீவர், மாஸ்டில் இருந்து கம்பிகளை தனிமைப்படுத்தும் இன்சுலேட்டர், தொய்வு ஏற்படாமல் இருக்க காண்டாக்ட் ஒயரில் ஆட்டோ டென்ஷனர்கள் / டெட் வெயிட் ஆகியவற்றை ஆய்வு செய்தனர். 24 எஃகுக் கயிறுகளால் தாங்கப்பட்டு, உயர்த்தப்பட்டும் இறக்கப்படும்போதும் 700 டன் எடையுடையது. கயிறுகளை தயாரிக்கும் நிறுவனத்தின் தலைமை பொறியாளர்கள் குழு ஜார்கண்ட் தலைநகர் ராஞ்சியில் இருந்து வந்து நேற்று முதல் ஆய்வு செய்து வருகிறது.
பாலத்தை ரயில்வே பாதுகாப்பு ஆணைய முதன்மை அதிகாரிகள் ஆய்வு செய்த பின் திறப்பு விழா தேதி இன்னும் சில நாட்களில் அறிவிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.