திருப்பூர்: பின்னலாடை உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கு பெயர் பெற்ற திருப்பூரில், பின்னலாடை தொழிலை மட்டுமின்றி, தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் பிற மாநிலங்களை சேர்ந்த லட்சக்கணக்கானோர் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதால், தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்க, திருப்பூர் புதுமார்க்கெட் வீதி, காமராஜர் சாலை, குமரன் சாலை, டவுன்ஹால், பழைய மார்க்கெட் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் குவிவது வழக்கம்.
இதனை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையிலும், அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாத வகையிலும் காவல் துறை சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன. நகரில் பாதுகாப்பு வசதிகள் மற்றும் தேவைகள் குறித்து மாநகர போலீஸ் கமிஷனர் லட்சுமி நேற்று மாநகரின் பல்வேறு பகுதிகளில் நேரில் ஆய்வு செய்தார்.
நகரின் முக்கிய பகுதிகளில் கண்காணிப்பு கோபுரங்கள் மற்றும் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளதை ஆய்வு செய்தார். மேலும் பொது இடங்களில் கூடுதல் போலீசாரை நியமிப்பது குறித்தும் போலீசாருடன் ஆலோசனை நடத்தினார். போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவது மட்டுமின்றி, அசம்பாவிதங்கள் ஏதும் நிகழாமல் தடுக்கும் வகையில் விழிப்புடன் செயல்பட வேண்டும் என போலீசாருக்கு அறிவுறுத்தினார். ஆய்வின்போது மாநகர காவல் துணை ஆணையர் சுஜாதா, காவல் உதவி ஆணையர் நாகராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.