திருவனந்தபுரம்: கேரளாவில் உள்ள வயநாடு தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, ரேபரேலி தொகுதியை தக்க வைத்துக் கொண்ட நிலையில், வயநாடு எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார்.
இதையடுத்து, வயநாட்டில் நவம்பர் 13-ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. காங்கிரஸ் கூட்டணி சார்பில் பிரியங்கா காந்தியும், இடதுசாரி கூட்டணி சார்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் சத்யன் மொகேரியும் போட்டியிடுகின்றனர். பிரியங்கா காந்தி அடுத்த வாரம் முதல் வயநாட்டில் பிரச்சாரத்தை தொடங்குகிறார்.
இதற்காக வரும் 22-ம் தேதி வயநாடு வருகிறார். நாளை மறுநாள் (23-ம் தேதி) வேட்புமனு தாக்கல் செய்ய திட்டமிட்டுள்ளார். அன்று முதல் 10 நாட்களுக்கு வயநாடு தொகுதியில் பிரியங்கா காந்தி பிரசாரம் செய்கிறார். அவருடன் ராகுல் காந்தியும் வயநாடுக்கு வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த தொகுதியில் கடந்த 2019 தேர்தலில் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும், இந்த ஆண்டு நடந்த தேர்தலில் 3.64 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றார்.
பிரியங்காவை எதிர்த்து பாஜக வேட்பாளர் வயநாடு லோக்சபா இடைத்தேர்தலில் பிரியங்கா காந்தியை எதிர்த்து பா.ஜ.க., சார்பில் குஷ்பு களமிறங்குவார் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், பாஜக சார்பில் கோழிக்கோடு மாநகராட்சி பெண் கவுன்சிலர் நவ்யா ஹரிதாஸ் அறிவிக்கப்பட்டுள்ளார்.
பிடெக் மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்துள்ள நவ்யா, கோழிக்கோடு மாநகராட்சி கவுன்சிலராக 2 முறை பணியாற்றினார். கடந்த சட்டசபை தேர்தலில் கோழிக்கோடு தெற்கு தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தற்போது நவ்யா, பாஜ மகளிராணி மாநில பொதுச்செயலாளராக பதவி வகித்து வருகிறார்.