ஐதராபாத்: ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மாநிலத்தில் நிகழ்ச்சி ஒன்றில் பேசுகையில், ‘ஆந்திர மாநிலத்தில் வசிப்பவர்கள் அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள வேண்டும். ஆந்திராவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு இந்த அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
மக்கள் தொகை மேலாண்மைக்கு மாநில அரசு திட்டமிட்டு வருகிறது. அதன்படி, அதிக குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும். இது தவிர, இரண்டு குழந்தைகளுக்கு மேல் உள்ளவர்கள் மட்டுமே உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுவர்.
அதிக குழந்தைகள் உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடக் கூடாது என்று முன்பு சட்டம் கொண்டு வந்தோம். ஆனால் தற்போது அந்தச் சட்டத்தை ரத்து செய்து, மாற்றியமைக்க முடிவு செய்துள்ளோம். அதிக குழந்தைகள் உள்ள குடும்பங்களுக்கு கூடுதல் வசதிகளை வழங்குவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. தென் மாநிலங்களில் குறிப்பாக ஆந்திராவில் முதியோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது கவலையளிக்கிறது.
ஜப்பான், சீனா உள்ளிட்ட சில ஐரோப்பிய நாடுகளில் முதியோர்கள் அதிகம் வசிக்கின்றனர். தென்னிந்தியாவில் இளைஞர்கள் நாட்டின் பிற பகுதிகளுக்கு அல்லது வெளிநாடுகளுக்கு இடம்பெயர்வதால் பிரச்சனை அதிகரித்து வருகிறது. தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் குறைந்து வருகிறது. தென் மாநிலங்களில் கருவுறுதல் விகிதம் 1.6 சதவீதம்; இது தேசிய விகிதமான 2.1ஐ விட மிகக் குறைவு.
இதே நிலை நீடித்தால், 2047-ல் நம் முதியோர் எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும். ஆந்திரா மட்டுமின்றி நாட்டின் பல கிராமங்களில் இப்போது முதியோர்கள் மட்டுமே எஞ்சியுள்ளனர். மக்கள்தொகைக் கட்டுப்பாட்டில் எனது முந்தைய முயற்சிகளைத் திரும்பப் பெற முடிவு செய்துள்ளேன்.
வேகமாக அதிகரித்து வரும் மக்கள் தொகையால் இயற்கை வளங்கள் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.