சென்னை: இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மாநாட்டிற்கான ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விஞ்ஞானிகள் மற்றும் கல்வியாளர்களுக்கு யுஜிசி அழைப்பு விடுத்துள்ளது. இதுகுறித்து பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) செயலர் மணீஷ் ஆர்.ஜோஷி உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை:-
சர்வதேச விண்வெளி கூட்டமைப்பு (ஐஏஎஃப்) அதன் உறுப்பு அமைப்புகளுடன் இணைந்து விண்வெளி தொடர்பான சர்வதேச மாநாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளது. இந்த மாநாடு அடுத்த ஆண்டு மே 7 முதல் 9 வரை டெல்லியில் நடைபெற உள்ளது. பொறியாளர்கள், விஞ்ஞானிகள், தொழில் முனைவோர், கல்வியாளர்கள் கலந்து கொண்டு விவாதித்து ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்கலாம்.
அதன்படி, சர்வதேச விண்வெளி சமூகத்துடன் ஈடுபடுவதற்கான விண்வெளி தொழில்நுட்பம் மற்றும் ஆய்வில் இந்தியாவின் திறன்களை வெளிப்படுத்த ஒரு தனித்துவமான தளத்தை இந்த நிகழ்வு வழங்கும்.
இதில் பங்கேற்று ஆய்வுக் கட்டுரைகளை சமர்ப்பிக்க விரும்புவோர் தாளின் சுருக்கத்தை அனுப்ப வேண்டும். மேலும் விவரங்களுக்கு 88931 07176 என்ற எண்ணில் இஸ்ரோ தலைமையகத்தின் தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் புத்தாக்க இயக்குனரகத்தின் துணை இயக்குநர் முகமது சாதிக்கை தொடர்பு கொள்ளவும்.